

புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியதன் மூலம் 2013-ம் ஆண்டு முதல் 4.39 கோடி போலி ரேஷன் கார்டுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய நுகர்வோர் நலம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் ஏழை மக்கள் நலனுக்காக பொது விநியோக முறையில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்டவை குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அதிகளவில் போலி ரேஷன் கார்டுகள் உலவுவதாகத் தெரிய வந்தது. இதையடுத்து போலி ரேஷன் கார்டுகளை தடுக்கவும், உண்மையான பயனாளர்கள் அரசின் உதவித் திட்டங்கள் சென்று சேரவும் பல்வேறு தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டன
இதைத் தொடர்ந்து பயனாளர்களின் விவரங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டன. ஆதார் விவரங்களை இணைத்தல், தகுதி இல்லாத, போலி ரேஷன் கார்டுகளை ஒழித்தல், ஒரே பெயரில் 2 கார்டுகள் இருப்பதைத் தடுத்தல், இடம் மாறுதல், இறப்பு போன்றவை நடந்த போதும் பயன்பாட்டில் இருந்த ரேஷன் கார்டுகளை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கைகளால் சுமார் 4.39 கோடி போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் தகுதியான பயனாளர்களை அரசின் நல உதவித் திட்டங்கள், பொருட்கள் சென்றடைய இவை உதவுகின்றன.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி தற்போது 81.35 கோடி குடும்பங்களுக்கு ரேஷனில் தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இது 3-ல் இரண்டு பங்காகும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.