Published : 06 Nov 2020 10:23 PM
Last Updated : 06 Nov 2020 10:23 PM

கரோனா: இத்தாலி பிரதமருடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி

பிரதமர் மோடி மற்றும் இத்தாலி பிரதமருக்கிடையேயான இருதரப்பு மெய்நிகர் மாநாட்டில் இரு தலைவர்களும் விரிவான ஆலோசனை நடத்தினர்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலி பிரதமர் பேராசிரியர் கியுசெப் கோன்டே ஆகியோருக்கிடையே இருதரப்பு மெய்நிகர் மாநாடு 2020 நவம்பர் ஆறு அன்று நடைபெற்றது.

பேராசிரியர் கியுசெப் கோன்டே 2018-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்ததை நினைவுகூர்ந்த மோடி, இந்தியா- இத்தாலிக்கு இடையேயான உறவு சமீபகாலங்களில் வேகமாக வலுவடைந்திருப்பதை சுட்டிக்காட்டினார். நிலைமை சீரானவுடன் இத்தாலிக்கு வருகை புரியுமாறு பிரதமர் மோடிக்கு பிரதமர் பேராசிரியர் கோன்டே அழைப்பு விடுத்தார்.

இருதரப்பு உறவுகளுக்கான கட்டமைப்பை விரிவாக ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை இந்த மாநாடு இரு தலைவர்களுக்கும் வழங்கியது. கோவிட்-19 உட்பட பொதுவான உலக சவால்களை எதிர்த்துப் போராடுவதில் வலுவான ஒத்துழைப்புக்கான உறுதியை தலைவர்கள் உறுதிப்படுத்தினர்.

அரசியல், பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட விரிவான விஷயங்களை தலைவர்கள் விவாதித்தனர். குறிப்பாக ஜி-20 உள்ளிட்ட பிராந்திய மற்றும் சர்வதேச தளங்களில் நெருங்கி பணிபுரிவது என இருதரப்பும் ஒத்துக்கொண்டன.

டிசம்பர் 2021-இல் இத்தாலியும், 2022-இல் இந்தியாவும் ஜி-20 தலைமைப் பொறுப்பை ஏற்பார்கள். டிசம்பர் 2020-இல் இருந்து இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இணைந்து ஜி-20 நிர்வாக அமைப்பில் இருப்பார்கள். ஒப்புதல் நடவடிக்கை முடிந்தவுடன் சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் இணைய இத்தாலி முடிவெடுத்திருப்பதை இந்தியா வரவேற்றது.

மாநாடு நிறைவடைவதை குறிக்கும் விதமாக எரிசக்தி, மீன்வளம், கப்பல் கட்டுதல், வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x