‘‘மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்; தங்க வங்காளம் உருவாகும்’’ - அமித் ஷா ஆவேசம்

‘‘மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்; தங்க வங்காளம் உருவாகும்’’ - அமித் ஷா ஆவேசம்
Updated on
1 min read

மோடியின் ஆட்சி மேற்குவங்க மாநிலத்திலும் அமைவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும், பாஜக ஆட்சியமைக்கும், 5 ஆண்டுகளில் தங்க வங்காளம் உருவாகும் என பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறினார்.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் 200 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என்று பாஜக சூளுரைத்துத் திட்டம் தீட்டிச் செயல்பட்டு வருகிறது. அதேசமயம் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் பாஜகவுக்குக் கடும் போட்டியளித்து வருகிறது.

இந்தச் சூழலில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 இடங்களில் பாஜக 200 இடங்களை கைபற்றி ஆட்சியமைக்கும். இது நாங்கள் புன்னகை செய்யும் நேரம். ஏனெனில்
மம்தா பானர்ஜியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.

மோடியின் ஆட்சி மேற்குவங்க மாநிலத்திலும் அமைவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற ஆதரவு தர வேண்டும்.

காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இதுவரை வாய்ப்பு கொடுத்த மேற்குவங்க மக்கள் இந்த முறை பாஜகவுக்கு வாய்ப்பு தர வேண்டும். வங்கம் இழந்த பெருமையை மீட்டெடுக்கும். 5 ஆண்டுகளில் தங்க வங்காளம் உருவாகும்.

வாரிசு அரசியலுக்கும் வளர்ச்சி அரசியலுக்கும் நடக்கும் போர் இந்த தேர்தல். ஊருவல்காரர்களிடம் இருந்து வங்கத்தை மீட்டெடுப்போம்.

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். கடந்த ஓராண்டில் பாஜக தொண்டர்கள் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையை கட்டவிழ்த்து விட்டு காட்டாச்சி நடைபெறுகிறது.

மம்தா பானர்ஜியின் அரசு மீது மேற்குவங்க மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இவர்கள் பாஜகவை இன்முகத்துடன் வரவேற்க தயாராக உள்ளனர்.’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in