

வாட்ஸ் அப்பில் இதுநாள்வரை மெசேஜ், படங்கள், வீடியோ, ஆடியோ மட்டுமே அனுப்பி வந்த பயன்பாட்டாளர்கள் இனிமேல், பாதுகாப்பான முறையில், பணத்தையும் ஒருவருக்கு அனுப்ப முடியும்.
இந்தியாவில் முதல் முறையாக வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்பும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) விடம் இருந்து இதற்கான அனுமதி கிடைத்த நிலையில், இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்படும் வாட்ஸ் அப் செயலி, கடந்த 2018 ஆம் ஆண்டு, யூபிஐ மூலம் பணம் அனுப்பும் வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த வசதியைப் பயன்படுத்தி பயன்பாட்டாளர்கள் பணத்தை ஒருவருக்கு அனுப்பவும், பெறவும் முடியும். ஆனால், இதற்கான பரிசோதனை குறிப்பிட்ட சில லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் பணம் அனுப்பும் சேவையை வழங்க என்பிசிஐ நேற்று அனுமதி வழங்கியது. இதன் மூலம் வர்த்தகர்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் விற்று, பணத்தை வாட்ஸ் அப் மூலம் பெறலாம். ஒருவர் மற்றொருவருக்குப் பணத்தையும் அனுப்ப முடியும். வாட்ஸ் அப்பில் பணம் அனுப்பும் வசதி படிப்படியாக அமல்படுத்தப்படும்.
இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனம் தனது பிளாக்கில் கூறுகையில், “இன்று முதல், இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்பலாம், பெறலாம். பாதுகாக்கப்பட்ட வழிமுறைகளுடன் உருவாக்கப்பட்ட இந்த முறையின் மூலம் எளிதாக பணத்தைப் பெறலாம், அனுப்பலாம்.
மக்கள் பாதுகாப்பான முறையில் குடும்ப உறுப்பினர்களுக்குப் பணம் அனுப்பலாம். பொருட்களை வாங்கிவிட்டு, ரொக்கப் பணம் இல்லாமல், வங்கிக்குச் செல்லலாம் பணத்தை அனுப்பலாம். என்பிசிஐ மற்றும் யூபிஐ அமைப்புடன் இணைந்து வாட்ஸ் அப் நிறுவனம் பணம் அனுப்பும் சேவையைத் தொடங்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் பிரேசில் நாட்டில் வாட்ஸ் அப் நிறுவனம் பணம் அனுப்பும் வசதியை உலகின் முதல் நாடாகத் தொடங்கியது.
இந்தியாவைப் பொறுத்தவரை பேடிஎம், கூகுள் பே, வால்மார்ட் நிறுவனத்தின் ஃபோன்பே, அமேசான் பே ஆகியவை ஏற்கெனவே வலிமையாக இருக்கும் நிலையில், அவர்களோடு வாட்ஸ் அப் நிறுவனமும் போட்டியிடும். ஏறக்குறைய 40 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பேமெண்ட் சர்வீஸ் ஆப்ஸ்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பணம் செலுத்தும் வசதி முதல் கட்டமாக சமீபத்திய ஐபோன் வெர்ஷன்கள், ஆண்ட்ராய்ட் போன்களில் மட்டுமே கிடைக்கும். படிப்படையாக அப்டேட் வெர்ஷன்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
இந்தியாவின் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் வங்கி, ஜியோ பேமேண்ட் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து வாட்ஸ் அப் பேமெண்ட் சேவையை வழங்க உள்ளது. இதன் மூலம் யூபிஐ ஆதரவுடன், வாட்ஸ் அப் மூலம் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம், யாரிடமிருந்தும் பணம் பெறலாம்.
வாட்ஸ் அப் பேமெண்ட் ஆப்ஸில் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளதால், ஒவ்வொரு முறை பணம் அனுப்பும்போது, தனிப்பட்ட பாதுகாப்பு எண்களைப் பதிவு செய்தபின்பே பயன்படுத்த முடியும் வகையில் செயலி அமைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்பவும், பெறவும் எந்தவிதமான கட்டணமும் இ்ல்லை.