

கடந்த 5 வாரங்களாக கோவிட் பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைந்து வீடு திரும்புவோர் அதிகமாகவுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கு குறைவாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 54 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 5 வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கையை விட, குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 54,157 பேர் குணமடைந்துள்ளனர். 47,638 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 5 வாரங்களாக தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அக்டோபர் முதல் வாரத்தில், தினசரி சராசரி தொற்று பாதிப்பு 73 ஆயிரமாக இருந்தது. தற்போது தினசரி சராசரி பாதிப்பு 46 ஆயிரமாக குறைந்துள்ளது.
குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நாட்டில் இன்று 5,20,773 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மொத்த பாதிப்பில் 6.19%.
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77,65,966 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோருக்கும், சிகிச்சை பெறுவோருக்கும் இடையேயான இடைவெளி 72.5 லட்சமாக உள்ளது. தேசிய அளவில் குணமடைந்தோர் வீதம் 92.32 %-மாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 670 பேர் பலியாகியுள்ளனர்.