Last Updated : 06 Nov, 2020 03:32 PM

 

Published : 06 Nov 2020 03:32 PM
Last Updated : 06 Nov 2020 03:32 PM

கேரளாவில் முதல் முறை: திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோயிலில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் அர்ச்சகராக நியமனம் 

கேரள முதல்வர் பினராயி விஜயன் : கோப்புப்படம்

திருவனந்தபுரம்

கேரளாவில் இதுவரையில்லாமல் முதல் முறையாக திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட கோயிலில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவிதாங்கூர் தேவஸ்தானம், கேரள மாநிலத்தில் 1,200க்கும் மேற்பட்ட கோயில்களை நிர்வகித்து வருகிறது. இந்தக் கோயில்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 பேரை அர்ச்சகராக நியமிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்தது.

இதன்படி, வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக பட்டியலினத்தைச் சேர்ந்த 18 பேரும், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரும் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தாங்கள் நியமிக்கப்பட்ட கோயில்களில் பகுதி நேர அர்ச்சகர்களாகச் செயல்படுவார்கள்.

இதற்கு முன் வேற்று சாதி, பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக கேரளாவில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பழங்குடியினத்திலிருந்து இதுவரை யாரும் கோயில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதில்லை. முதல் முறையாக இப்போதுதான் கோயில் அர்ச்சகராக பழங்குடியினத்திலிருந்து ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தேவஸம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், “ கேரள வரலாற்றிலேயே முதல் முறையாக, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருவிதாங்கூர் தேவஸ்தானம் அர்ச்சகராக நியமித்துள்ளது. பட்டியலினம், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் பகுதி நேர அர்ச்சகர்களாக சிறப்புப் பிரிவின் கீழ் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோயில்களில் அர்ச்சகர்களாகப் பகுதி நேரமாகப் பணியாற்ற கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து 310 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், தேர்வு எழுதியதில் போதுமான அளவு பட்டியலினம், பழங்குடியினத்திலிருந்து தேர்ச்சி அடையவில்லை. இதையடுத்துச் சிறப்புத் தரவரிசை உருவாக்கப்பட்டு அவர்கள் பட்டியலிடப்பட்டு பகுதி நேரமாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி பழங்குடியினப் பிரிவினருக்கு 4 காலியிடம் அறிவிக்கப்பட்டதில் ஒருவர் மட்டுமே விண்ணப்பித்திருந்தார். அதனால், அவருக்கு மட்டும் பணி உத்தரவு வழங்கப்பட்டது.

மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரிக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, திருவிதாங்கூர், கொச்சின், மலபார் தேவஸ்தான வாரியத்துக்கு 815 பேர் பல்வேறு விதமான பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த நான்கரை ஆண்டுகளில் பிராமணர் அல்லாத 135 பேர் பல்வேறு கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x