

திருப்திப்படுத்தும அரசியல் செய்துதான் மாநிலத்தின் புனிதத்தைக் களங்கப்படுத்தி விட்டார்கள். மேற்கு வங்கம் இழந்த புனிதத்தை மீட்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் 200 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என்று பாஜக சூளுரைத்துத் திட்டம் தீட்டிச் செயல்பட்டு வருகிறது. அதேசமயம் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் பாஜகவுக்குக் கடும் போட்டியளித்து வருகிறது.
இந்தச் சூழலில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ளார். 2-வது நாளான இன்று, கொல்கத்தாவில் உள்ள தக்ஷினேஷ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.
வழிபாட்டை முடித்து வெளியே வரும்போது நிருபர்களுக்கு அமித் ஷா பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “மேற்கு வங்க மாநிலத்தின் மண் மிகவும் புனிதமானது. சைதன்ய மகாபிரபு, ஸ்ரீ ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் ஆகியோர் பிறந்த புனிதமான மண். இந்த மண்ணில் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து, பழங்காலத்தின் புனிதத்தையும், ஆன்மிகத் தன்மையையும் களங்கப்படுத்துகிறார்கள்.
நான் மேற்கு வங்க மாநில மக்களுக்கு விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், விழித்திடுங்கள், உங்கள் பொறுப்பை உணர்ந்து, இந்த மண்ணின் ஆன்மிகத்தை, புனிதத்தை மீண்டும் திருப்பிக் கொண்டுவாருங்கள் எனக் கேட்கிறேன்.
இந்த மாநிலத்தின், தேசத்தின், மக்களின் நலனுக்காத்தான் இங்கு சாமி தரிசனம் செய்தேன். பிரதமர் மோடியின் தலைமையில் இந்த தேசம் உலகில் ஆன்மிகப் புனிதத்தன்மையுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தேன்’’ எனத் தெரிவித்தார்.
கோயிலுக்கு வந்த அமித் ஷாவைப் பாஜக மாநில நிர்வாகிகள், மோகிலா மோர்ச்சா, மாநிலத் தலைவர் அக்னிமித்ரா பால் ஆகியோர் வரவேற்றனர்.