

கோவிட்-19 பாதிப்பு காலங்களில் மக்களுக்கு மேலும் சிரமமா? உ.பி.யில் பூட்டப்பட்ட வீடுகளில் கூட ஏழு, எட்டாயிரம் வரை மின் கட்டணம் வருவதால் முறைகேடுகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டுமென யோகி ஆதித்யநாத் அரசுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி கூறியுள்ளதாவது:
''கடந்த சில ஆண்டுகளில் மின்சார விகிதங்களில் பெரிய உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் கிராமப்புற வீட்டு நுகர்வோருக்கான விகிதங்கள் 500 சதவீதம் அதிகரித்துள்ளன. நகர்ப்புற உள்நாட்டு மின்சார விகிதங்கள் 84 சதவீதம் உயர்ந்துள்ளன. விவசாயிகளுக்கு 126 சதவீதம் அதிகரித்துள்ளன.
மின்சார மீட்டர்களைப் பொறுத்தவரையில் (மின் அளவீட்டுக் கருவி) உ.பி. ஓர் ஆய்வகமாக மாறியுள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான மீட்டர்கள் பல மடங்கு வேகமாக இயங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பூட்டப்பட்ட வீடுகளில் கூட, ரூ.8,000 வரை மின் கட்டணம் வருகிறது. மாநிலத்தின் பல மாவட்டங்களில், மின்சார மீட்டர் நிறுவப்படாமலேயே பில்கள் வந்துள்ளன. இம்முறைகேடுகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.
உ.பி. மக்கள் பயன்படுத்தும் மின்சார அளவீட்டுக் கருவிகளில் மீட்டர் வேகமாக இயங்குகிறது. இதற்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விலை உயர்வு காரணமாக பொதுமக்களின் வணிகங்கள் சரிந்துவிட்டன. விவசாயிகளின் விளைபொருட்கள் விற்கப்படாமல் வீணாகி வருகின்றன. வெள்ளம், ஆலங்கட்டி மழை மற்றும் இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டால் அவர்களுக்குச் சரியான உதவி கிடைக்கவில்லை.
பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்பது இன்று பெரிய நிறுவனங்களுக்கான ஒரு வருமான ஆதாரமாக மாறியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், மின்சாரக் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேலும், மின் கட்டண முறைகேடுகளின் பாதிப்பை நுகர்வோர் இனி தாங்க முடியாது.
கோவிட்-19 நோய்த்தொற்றுக் காலங்களில், அரசு என்ன செய்திருக்க வேண்டும் என்றால் மின்சார விகிதத்தைப் பெரிய அளவில் குறைப்பதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். விவசாயிகளின் மின்சாரக் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, நெசவாளர்கள்-கைவினைஞர்கள், சிறு அளவிலான தொழில்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
எனவே, உ.பி. அரசு, விவசாயிகளுக்கான மின்சார விகிதங்களைப் பாதியாகக் குறைத்திட வேண்டும். மின் அளவீட்டு முறைகேடுகள் பற்றிய உண்மையை மக்கள் முன் கொண்டுவர வேண்டும். அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நெசவாளர்கள்-கைவினைஞர்கள் மற்றும் சிறு தொழில்களுக்கு மின்சாரப் பயன்பாட்டில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்''.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.