பிஹார் மாநிலம் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழப்பு?- 25 பேர் உயிருடன் மீட்பு
பிஹார் மாநிலம் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பிஹார் மாநிலம் நவ்காச்சியா காவல் மாவட்டம் கோபால்கஞ்ச் காவல் சரகத்துக்குட்பட்ட பகுதியில் கங்கை ஆற்றில் தீன்-தாங்காஜஹாஜ் படித்துறை உள்ளது.இந்த படித்துறையிலிருந்து நேற்றுஒரு படகில் 50 பேர் அருகிலுள்ள கிராமத்துக்கு அறுவடைப்பணிக்காக சென்றனர். ஆற்றின்நடுவே படகு சென்றபோது நிலை தடுமாறி கவிழ்ந்துள்ளது.
காலை 10.30 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஆற்றில் தத்தளித்த 25 பேரை, அருகில் இருந்த கிராம மக்கள் நீரில் குதித்து காப்பாற்றியுள்ளனர். விவரம் அறிந்த போலீஸாரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நவ்காச்சியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்வப்னா ஜி மெஷ்ராம் கூறிய தாவது:
படகில் சென்றவர்கள் பெரும்பாலும் விவசாயக் கூலி வேலைசெய்பவர்கள். படகு கவிழ்ந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. படகில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியுள்ளதாகத் தெரிகிறது. இதுவரை 2 பெண்களின் சடலங்களை கண்டெடுத்துள்ளோம். காயம் அடைந்தவர்கள் சதார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தேசியப் பேரிடர்மீட்புப் படையினரும் (என்டிஆர்எப்), மாநில பேரிடர் மீட்புப் படையினரும் (எஸ்டிஆர்எப்) தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
படகில் சென்றவர்கள் பெரும்பாலும் விவசாயக் கூலிகள் என்றும் மேலும் பால் வியாபாரிகள், கூலித் தொழிலாளர்களும் அந்தப் படகில் சென்றதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மீட்புப் பணியில் நன்கு நீச்சல் தெரிந்தவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் உள்ளூ ரைச் சேர்ந்தவர்கள் பலரும் தகுந்த நேரத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டதால் பலர் உயிர் பிழைத்ததாகவும் அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
