

பருவநிலை மாற்றம் குறித்த முக்கிய பிரகடனத்தை பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.
பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றும் வகையிலும், தேசிய அளவில் பெறப்பட்ட பங்களிப்புகளின் அடிப்படையிலும் இந்தியா செயல்பட்டு வருவதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் ஒரு சில நாடுகளுள் இந்தியாவும் தனியார் துறையுடன் இணைந்து உறுதியுடன் பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.
பருவநிலை மாற்றத்திற்கு எதிராக 24 முக்கிய தனியார் நிறுவனங்களின் தலைவர்களும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமும் கையெழுத்திட்ட பருவநிலை மாற்றம் குறித்த ஓர் பிரகடனத்தை இந்திய தலைமைச் செயல் அதிகாரிகள் அமைப்பின் மன்றத்தில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார்.
இதுகுறித்து பேசிய அவர், பருவ நிலை மாற்றம் தொடர்பாக தனியார் துறையினர் தாமாகவே முன்வந்து தயாரித்துள்ள இந்த பிரகடனம் ஓர் வரலாற்று சிறப்பு வாய்ந்த நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.
கரியமில அளவை குறைக்க தனியார் துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அரசிடம் தெரிவிக்குமாறு அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.