Last Updated : 05 Nov, 2020 05:29 PM

 

Published : 05 Nov 2020 05:29 PM
Last Updated : 05 Nov 2020 05:29 PM

டெல்லி மக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்: கேஜ்ரிவால் வேண்டுகோள்

டெல்லி மக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்; வீடுகளிலிருந்து லட்சுமி பூஜையில் பங்கேற்க வேண்டும் என டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக டெல்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளதாக நேற்று முதல்வர் கேஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து இன்று காற்று மாசு காரணமாக டெல்லி மக்களை இந்த ஆண்டு பட்டாசு வெடிப்பதை தவிர்க்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வியாழக்கிழமை கூறியுள்ளதாவது:

டெல்லியில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, தீபாவளிக்காக பட்டாசு வெடிப்பதும் COVID-19 க்கு இடையில் மாசுபாட்டை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செய்ததைப் போலவே தீபாவளியிலும் பட்டாசுகளை எரிப்பதைத் தவிர்ப்பதற்கான உறுதிமொழியை டெல்லிவாழ் மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். டெல்லிவாசிகளுக்காக கடந்த ஆண்டு கனாட் பிளேஸில் நடைபெற்ற ஒளி நிகழ்ச்சி ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்த ஆண்டும் டெல்லி மக்கள் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும், இந்த தீபாவளியின்போது வீடுகளிலிருந்தே லட்சுமி பூஜையில் பங்கேற்க வேண்டுமெனவும் கேஜ்ரிவால் டெல்லி மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு நாங்கள் வெவ்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறோம். தீபாவளி, நவம்பர் 14 அன்று இரவு 7:39 மணி முதல் டெல்லியின் 2 கோடி மக்கள் ஒன்றாக லட்சுமி பூஜை செய்யத் தொடங்க வேண்டும்.

சில சேனல்களால் நேரடியாக ஒளிபரப்பப்படும் நேரத்தில் நான், எனது அமைச்சர்களுடன், லட்சுமி பூஜையைத் தொடங்குவேன். டெல்லி மக்கள் அனைவரும் உங்கள் தொலைக்காட்சிகளை இயக்கி, உங்கள் குடும்பத்தினருடன் லட்சுமி பூஜையில் அமருமாறு கேட்டுக்கொள்கிறேன்,

பகவான் ராம் சந்திரஜி 14 வருட வனவாசத்தில் இருந்து திரும்பிய நாளில், டெல்லியின் 2 கோடி மக்கள் ஒன்றாக, ஒரே குரலில், லட்சுமி பூஜை மற்றும் தீபாவளி பூஜை செய்யும்போது, ​ டெல்லி முழுவதிலும் ஒரு வித்தியாசமான மனநிலை இருக்கும்.

டெல்லியில் நிறைய நேர்மறையான அதிர்வுகள் ஏற்படும், இது டெல்லிக்கும் அதன் மக்களுக்கும் நல்லது.

இவ்வாறு முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு தீபாவளிக்குப் பிறகு டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டது. டெல்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களில் விவசாயக் கழிவுப் பொருட்கள் எரிப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டு டெல்லியை மாசடையச் செய்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர். பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. டெல்லியில் தரையிறங்க முடியாமல் விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x