இப்படியெல்லாம் விஷத்தனமாக பிரச்சாரம் செய்வது யார்? வேறு வேலை இல்லையா?- யோகி ஆதித்ய நாத் மீது நிதிஷ் குமார் சூசகத் தாக்கு
ஒரு புறம் பிஹாரில் பாஜக ஆட்சியமைந்தால் சிஏஏவை அமல்படுத்தி ஊடுருவல்வாதிகளை வெளியேற்றுவோம் என்று யோகி ஆதித்யநாத் பேச, அதனை கடுமையாக மறுக்கும் விதமாக ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள நிதிஷ் குமார் கடுமையாக விமர்சனம் வைத்தார்.
யோகி ஆதித்யநாத் சட்ட விரோத குடியேறிகளை சிஏஏவைக் கொண்டு வந்து ‘தூக்கி எறிவோம்’ என்றார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியதோடு நிதிஷ் குமார் தன் ட்விட்டர் பக்கத்திலும் யோகி ஆதித்யநாத்துக்கு பெயரைக் குறிப்பிடாமல் பதிலடி கொடுத்துள்ளார்.
“யார் இப்படியெல்லாம் விஷத்தனமாக பிரச்சாரம் செய்வது? யார் இப்படி முட்டாள்தனமாக பேசுவது? யார் யாரை தூக்கி எறிவார்கள்? யாருக்கும் அதைச் செய்ய துணிவு இல்லை. அனைவருக்கும் இந்த நாடு சொந்தம். அனைவரும் இந்தியர்களே.
யார் இப்படிப் பேசுகிறார்கள்? நம் முயற்சி எல்லாமே ஒற்றுமை, ஒருமைப்பாடு, சகோதரத்துவமே. இதன் மூலம்தான் வளர்ச்சியை கொண்டு வரமுடியும். இப்படிப் பேசுபவர்கள் பிரிவினையை உண்டாக்குகிறார்கள், இவர்களுக்கு வேறு வேலை இல்லை.
அனைவரையும் ஒன்றிணைந்து வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்வதே நம் கடமை இதுதான் நம் பண்பாட்டிலும் உள்ளது. பிஹார் இப்படித்தான் வளர்ச்சியடைய முடியும்.” என்று யோகி ஆதித்யநாத் பெயரைக் குறிப்பிடாமல் மறுத்துப் பேசினார் நிதிஷ்.
