

கல்வி, வேலைவாய்ப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இட ஒதுக்கீடு கோரி குர்ஜார் மக்கள் ராஜஸ்தானில் தொடர்ந்து 2-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் அரசு பிற பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) ஒதுக்கீட்டை 21 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக உயர்த்தியது. இதற்கான சட்ட மசோதாவை அக்டோபர் 26, 2018 அன்று நிறைவேற்றியது. இதன்படி குர்ஜார்கள் மற்றும் நான்கு பிற பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு (ஓபிசி) மேலும் ஒரு சதவீத இட ஒதுக்கீடு அளிக்க ராஜஸ்தான் அரசு டிசம்பர் 2018 இல் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் குர்ஜார் மக்கள் தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (எம்பிசி) பிரிவில் வகைப்படுத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். அவர்கள் தங்களுக்கான இட ஒதுக்கீட்டை எம்பிசி பிரிவில் வழங்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்வதாக குர்ஜார் தலைவர் கிரோரி சிங் பெயின்ஸ்லா தெரிவித்துள்ளார்.
பரத்பூரில் ரயில் தடங்களில் ஏராளமான மக்கள் ரயில் பாதையின் குறுக்கே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களால் ரயில் பாதைகள் அடைக்கப்பட்டதால், மேற்கு மத்திய ரயில்வே பல ரயில்களைத் திசை திருப்பியுள்ளது.
ரயில் தடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூகத் தலைவர்களை ராஜஸ்தான் அரசுப் பிரதிநிதி ஒருவர் சந்தித்தார். போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் அரசாங்கத்திடம் தெரிவிக்கப்படும் என்றும், அதற்காக நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார்.
குர்ஜார் தலைவர் கிரோரி சிங் பெயின்ஸ்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், "எங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வகைப்படுத்துமாறும் அப்பிரிவில் எங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குமாறும் கோரி வருகிறோம். ஆனால், எங்கள் போராட்டத்தால் அரசாங்கம் இப்பகுதியில் இணையதளச் சேவைகளை நிறுத்தியுள்ளது.
நிர்வாகம் இணையச் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும். நாங்கள் எந்தப் பிரச்சினையையும் உருவாக்க மாட்டோம். எங்கள் நியாயமான கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யுங்கள். நாங்கள் இங்கிருந்து நகர்கிறோம்" என்றார்.