

வருவாய்க்கு அதிகமாக ரூ.6 கோடி சொத்து சேர்த்ததாக இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மற்றும் அவரது மனைவி மீது சிபிஐ கடந்த செப்டம்பர் 23-ம் தேதி வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இமாச்சலப் பிரதேச உயர் நீதி மன்றத்தில் வீரபத்ர சிங் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் வீரபத்ர சிங் மற்றும் அவரது மனைவியை கைது செய்யவும் விசாரணை நடத்தவும் கடந்த 1-ம் தேதி தடை விதித்தது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத் தில் சிபிஐ 2 மனுக்களை தாக்கல் செய்தது. உயர் நீதிமன்ற தடையை நீக்கவேண்டும், வழக்கை டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று தனித் தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகள் கலிபுல்லா, யு.யு.லலித் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, உயர் நீதிமன்ற தடையை நீக்குமாறு வாதிட்டார்.
“ஊழல் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாத படி ஊழல் தடுப்புச் சட்டம் பாது காப்பு அளிக்கிறது. இது தொடர் பாக உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு இதுவரை இல்லாத ஒன்று” என்று அவர் குறிப்பிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சிபிஐ மனுக்களுக்கு பதில் அளிக்கு மாறு வீரபத்ர சிங் மற்றும் அவரது மனைவிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் வழக்கை நவம்பர் 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்த னர். முன்னதாக சிபிஐ வழக்குக்கு எதிராக இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வீரபத்ர சிங் தாக்கல் செய்துள்ள மனுவில், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
வருமானத்துக்கு அதிகமாக வீரபத்ர சிங் ரூ.5 கோடி சேர்த்துள்ளதாக ‘காமன் காஸ்’ என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்துள்ள வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே விசாரணையில் உள்ளது. இந்நிலையில் “இதே காரணத்துக்காக சிபிஐ மற்றொரு வழக்கு பதிவு செய்தது, இதற்காக தனக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது அதிகார வரம்பு மீறிய செயல்” என்றும் வீரபத்ர சிங் தனது மனுவில் கூறியிருந்தார்.