Last Updated : 05 Nov, 2020 10:35 AM

 

Published : 05 Nov 2020 10:35 AM
Last Updated : 05 Nov 2020 10:35 AM

சோனிபட் நகரில் 20 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு: போலி மதுபானம் காரணமா? -ஹரியாணா போலீஸார் சந்தேகம்

ஹரியாணா மாநிலத்தின் சோனிபட் நகரில் மட்டும் கடந்த மூன்று நாட்களில் அடுத்தடுத்து 20 பேர் உயிரிழந்துள்ளதற்கு போலி மதுபானம் காரணமாக இருக்கக்கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

டெல்லி, தேசியத் தலைநகர் மண்டலத்திற்குள் (44 கி.மீ.க்குள்) இடம்பெற்றுள்ள நகரம் சோனிபட். இந்நகரம் ஹரியாணா மாநிலத்தின் சத்தீஸ்கர் நகரிலிருந்து 214 கிலோ மீட்டர் தென்கிழக்கே அமைந்துள்ளது.

இந்நகரில் கடந்த மூன்று நாட்களில் நான்கு வெவ்வேறு இடங்களில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்குப் போலித்தனமான மதுபானங்களை அருந்தியதே காரணம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து சோனிபட் துணை காவல் கண்காணிப்பாளர் வீரேந்தர் சிங் பிடிஐயிடம் கூறியதாவது:

''சோனிபட் நகரில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் அடுத்தடுத்து 20 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரே தகனம் செய்துள்ளனர்.

நான்கு பேரின் சடலங்களைப் பிரேதப் பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பியுள்ளனர். நான்கு உடல்களின் உடற்கூறு சோதனை அறிக்கைகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

போலி மதுபானம் உட்கொண்டதால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். உயிரிழப்புகள் மற்றும் அதற்கான காரணம் குறித்து போலீஸில் புகார் செய்ய குடும்ப உறுப்பினர்கள் யாரும் இதுவரை முன்வரவில்லை.

சோனிபட் நகரத்தின் மயூர் விஹார், சாஸ்திரி காலனி, பிரகதி காலனி மற்றும் இந்தியன் காலனி ஆகிய இடங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன''.

இவ்வாறு வீரேந்தர் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x