

உள் அலங்கார வடிவமைப்பாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைதான, 'ரிபப்ளிக் டிவி'யின் தலைமை ஆசிரியர், அர்னாப் கோஸ்வாமியை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, அலிபாக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் அலிபாக் பகுதியைச் சேர்ந்தவர் அன்வய் நாயக். இவர், 'இன்டீரியர் டிசைன்' எனப்படும், கட்டடங்களுக்கான உள் அலங்கார வடிவமைப்பு நிறுவனத்தை, சொந்தமாக நடத்தி வந்தார். கடந்த, 2018ல், இவரும், இவரது தாயாரும் தற்கொலை செய்து கொண்டனர். அப்போது, அவர் எழுதி வைத்த கடிதத்தை, போலீசார் கைப்பற்றினர்.
அதில், 'உள் அலங்கார வடிவமைப்பு பணிகள் செய்த வகையில், 'ரிபப்ளிக் டிவி' உட்பட, மூன்று நிறுவனங்களிடம் இருந்து, பல கோடி ரூபாய் வர வேண்டி உள்ளது. 'அதை தராமல் அவர்கள் இழுத்தடித்து வருகின்றனர். இதனால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக, தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
இவ்வழக்கை விசாரித்த அலிபாக் போலீசார், 'ரிபப்ளிக் டிவி' உரிமையாளரும், தலைமை செய்தி ஆசிரியருமான, அர்னாப் கோஸ்வாமி மீது, தற்கொலைக்கு துாண்டியது உட்பட, பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, நேற்று அவரை கைது செய்தனர். நேற்றிரவு, மாஜிஸ்திரேட் முன்னிலையில் கோஸ்வாமியை போலீசார் ஆஜர் படுத்தினர். அவரை, 18ம் தேதி வரை (14 நாட்கள்) நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
மேலும் அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது என்.எம்.ஜோஷி காவல்நிலையத்தில் பல்வேறு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாம்பே டையிங் ஸ்டூடியோ உள் அலங்கார வேலைகளுக்காக அன்வய் நாயக் குடும்பத்துக்கு ரிபப்ளிக் டிவி ரூ.83 லட்சம் தர வேண்டியுள்ளது. இதோடு அந்தேரியில் இன்னொரு வேலைக்கு ரூ.4 கோடி தர வேண்டியுள்ளது. இவற்றைக் கொடுக்காததால் கடன் தொல்லையினால் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.