

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்ம மூர்த்தி, சசிகலாவின் சிறைவாசம் தொடர்பாக அவ்வப்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்விகள் எழுப்பி வந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சசிகலாவின் விடுதலை தேதி குறித்து அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு சிறைத்துறை ‘2021ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது’ என்று சிறை நிர்வாகம் பதிலளித்தது.
ஆனால், ‘‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக என்னைப் பற்றி எழுப்பப்படும் கேள்விகள், விளம்பரம் மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. நான் விடுதலையாகி வெளியே வருவதை தடுக்கவே சிலர் இதை செய்கிறார்கள். எனவே என்னைப் பற்றிய தகவல்களை தரக் கூடாது’’ என்று சசிகலா கோரிக்கை விடுத்தார்.
இந்த மனுவை சிறைத்துறை டிஐஜி சிவகுமார், நிராகரித்துள்ளார். மேலும், நரசிம்ம மூர்த்தி எழுப்பிய கேள்விக்கு, 'சசிகலா ஆகஸ்ட் மாதம் வரை சிறையில் 3 ஆண்டுகள் 5 மாதங்கள் தண்டனை அனுபவித்துள்ளார். மொத்தமாக 17 நாட்கள் பரோலில் வெளியே சென்றுள்ளார். அவருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் வரும் ஜனவரியில் அவரது தண்டனை முடிவுக்கு வரும். ஒருவேளை அவர் மீண்டும் பரோலில் சென்றாலோ, ரூ.10 கோடி அபராதம் செலுத்த தவறினாலோ, விடுதலையாகும் தேதி மாறும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.