Published : 05 Nov 2020 03:12 AM
Last Updated : 05 Nov 2020 03:12 AM

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் புரோஹித் சந்திப்பு: அமித் ஷாவை இன்று சந்திக்கிறார்

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது 7 பேர் விடுதலை, வேல் யாத்திரை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். வெள்ளிக்கிழமை வரை 3 நாட்கள் டெல்லியில் தங்கியிருந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க அவர் திட்டமிட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி, நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் பன்வாரிலால் சந்தித்துப் பேசினார். 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, பாஜகவின் கூட்டணி கட்சி என்றாலும் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை என்று பல்வேறு பிரச்சினைகளிலும் இரு கட்சிகளும் எதிரெதிர் நிலைப்பாட்டில் உள்ளன. மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தாமதித்ததால் அதிமுக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன்பிறகு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையானது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த ஆளுநர் வற்புறுத்தியதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கடந்த 2018 செப்டம்பரில் தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இது தொடர்பான வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த உச்ச நீதிமன்றம், “7 பேரை விடுதலை செய்யும் இந்த விவகாரத்தில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். அவர் உத்தரவிட வேண்டும் என விரும்புகிறோம். தமிழக அரசின் தீர்மானம் மீது கடந்த 2 ஆண்டுகளாக ஆளுநர் நடவடிக்கை எதுவும் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. அதிருப்தி அளிக்கிறது" என்று தெரிவித்தது. இதை சுட்டிக்காட்டி 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்தை வழங்க மத்திய அரசு முன்வந்தது. இட ஒதுக்கீடு, மாநில உரிமைகள் பறிக்கப்படும் என்று கூறி சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா, மத்திய அரசுக்கு நேரடியாக கடிதம் எழுதியது பெரும் சர்ச்சை யானது. அண்ணா பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் பெயரும் அதில் அடி பட்டது. ஆளுநர் ஆலோசனையின்படி துணை வேந்தர் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

தமிழக பாஜக சார்பில் நவம்பர் 6-ம் தேதி திருத்தணியில் தொடங்கி, டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூர் வரை வெற்றிவேல் யாத்திரை நடக்கவுள்ளது. இதில் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், பாஜக தேசிய தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத மோதல்களுக்கு வழிவகுக்கும் என்றுகூறி வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், வேல் யாத்திரை தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடியை சந்தித்த ஆளுநர், 7 பேர் விடுதலை, அண்ணா பல்கலைக்கழக விவகாரம், வேல் யாத்திரை தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. 7 பேர் விடுதலை விவகாரத்தில் உள்ள சட்டச் சிக்கல்கள், அரசியல் விளைவுகள் குறித்து இருவரும் பேசியதாகத் தெரிகிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் இன்று சந்திக்கிறார். அப்போது 7 பேர் விடுதலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் அதிருப்தி குறித்து ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x