

உத்தரபிரதேசத்தின் மீரட் மசூதிக்குள் அனுமதி பெற்று அமர்ந்த பாஜக நிர்வாகி மனுபால் பன்ஸல், ஹனுமன் மந்திரம் ஓதினார். இது, அம்மாநில மதுரா கோயிலில் முஸ்லிம்கள் நடத்திய தொழுகையின் எதிரொலியாக பார்க்கப்படுகிறது.
உத்தரபிரதேசத்தின் மதுராவில் உள்ள புகழ்பெற்ற நந்த் கிஷோர்பாபா கோயிலுக்கு கடந்த மாதம்29-ம் தேதி டெல்லிவாசிகள் சிலர் சென்றனர். 2 முஸ்லிம்களை உள்ளடக்கிய அவர்கள் அக்கோயிலின் அர்ச்சகர்களிடம் ராமச்சந்திர மானஸின் சில ஸ்லோகங்களை எடுத்துரைத்து மத நல்லிணக்கம் பேசினர். இதனால், அவர்களுக்கு கோயிலில் வரவேற்பு கிடைத்தது. அப்போது அவர்கள் கோயிலை வலம் வருவதாகக் கூறி, அவ்வளாகத்தின் ஒரு இடத்தில் நின்று இருவர் திடீரென தொழுகை நடத்தினர்.
பிறகு சமூகவலைதளங்களில் வைரலான அப்படங்களால் பெரும்சர்ச்சை கிளம்பியது. இதற்காக நந்த் பாபா கோயிலில் தீட்டுப்பட்டு விட்டதாகக் கூறி சுத்தம் செய்து சிறப்பு பூசைகள் நடந்தேறின. அதேநேரம், தொழுகை நடத்தியவர்கள் மீது மதுரா காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதில், டெல்லியைச் சேர்ந்த பைஸல்கான், அலோக் ரத்தன் மற்றும் நீலேஷ் குப்தா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவானது. டெல்லியில் கைது செய்யப்பட்ட பைஸல்கானை மதுராவுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடைபெறுகிறது.
இக்கோயிலில் தொழுகை நடத்திய செயலுக்கு பதிலளிக்கும் வகையில், அம்மாநில மசூதிகளில் இந்துத்துவாவினர் தங்கள்மந்திரங்களை ஓதத் தொடங்கியுள்ளனர். இதை அனுமதி பெற்றும், பெறாமலும் செய்து அதன் வீடியோ பதிவுகளை வைரலாக்கி வருகின்றனர். இந்த வகையில், நேற்று முன்தினம் மதுராவின் ஈத்காவில் ஒரு சம்பவம் நடைபெற்றது. இதில், பஜ்ரங்தளம் மற்றும் பாஜகவின் இளைஞர் அமைப்பான இந்து யுவ மோர்ச்சாவின் 4 இளைஞர்கள் ஈத்காவில் திடீரென புகுந்து ஹனுமன் மந்திரம் ஓதி அதை வீடியோவில் பதிவிட்டனர்.
இதுகுறித்து ஈத்கா நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவாகி உள்ளது. இதில்,சவுரப், ராகவ் மித்தல், ராக்கி சிங்மற்றும் கன்னையா ஆகிய4 இளைஞர்களையும் மதுராபோலீஸார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜரான அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று பாக்பத்தின் காக்ரா பகுதியின் வினட்பூர் கிராமத்தின் மசூதியிலும் ஒரு சம்பவம் நடந்தேறியது. இதை அம்மசூதியின் மவுலானாவிடம் அனுமதி பெற்ற பாஜகவின் மாவட்ட துணைத்தலைவர் மனுபால் பன்ஸல் செய்திருந்தார்.
இதில், மசூதியின் உள்ளே சென்று அமர்ந்த அவர் அங்கு ஹனுமன் மற்றும் காயத்ரி மந்திரங்களை ஓதியுள்ளார். இதுவும் விடீயோ எடுக்கப்பட்டு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு அனுமதி அளித்த மவுலானா அலி ஹசன்,கடவுள் ஒருவர் எனவும் அவருக்கான மந்திரங்களை எங்கு வேண்டுமானாலும் ஓதலாம் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், பாக்பத்தின் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் அங்குள்ள அனைத்து மசூதிகளிலும் புகுந்து மந்திரங்கள் ஓதப்போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து முஸ்லிம் மவுலானாக்கள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். அதில், தேர்தல் நேரத்தில்அரசியல் ஆதாயம் பெறும் நடவடிக்கையான இது, இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என கூறி உள்ளனர்.