

அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் 30 நகரங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறைஏற்படும் அபாயம் உள்ளதாக ‘இயற்கைக்கான உலகளாவியநிதியம்’ என்ற சர்வதேச அமைப்புஎச்சரித்துள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்கெனவே உலகின் பல நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
வரும் 2050-ம் ஆண்டில் உலகின் 100 பெரு நகரங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதில் 30 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. இந்திய நகரங்களில் ஜெய்ப்பூர் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து தானே, மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட நகரங்கள் உள்ளன.
உலக நகரங்களில் பெய்ஜிங், ஜகார்த்தா, ஜோகன்னஸ்பர்க், இஸ்தான்புல், ஹாங்காங், மெக்கா, ரியோடி ஜெனிரோ உள்ளிட்டவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சீனாவின் கிட்டத்தட்ட பாதி நகரங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.
2050-ல் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் 100 நகரங்களில் தற்போது 35 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் பொருளாதார ரீதியில் முக்கிய நகரங்களாக இவை உள்ளன. உலகில் தற்போது 17 சதவீத மக்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். 2050-ல் இது 51 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிதியத்தின் இந்திய கிளைக்கான திட்ட இயக்குநர் செஜல் வோரா கூறும்போது, “இந்தியாவின் சுற்றுச்சூழல் எதிர்காலம் அதன் நகரங்களை சார்ந்துள்ளது.
இந்தியா விரைவாக நகரமய மாக்கப்பட்டு வருவதால் அதன்வளர்ச்சியில் நகரங்கள் முன்னணியில் இருக்கும். நகர்ப்புற நீராதாரங்களை புனரமைப்பது, நீர்பிடிப்பு பகுதிகளை மீட்டெடுப் பது போன்ற இயற்கை சார்ந்த தீர்வுகள் இந்தியாவுக்கு நன்மை களை வழங்கக் கூடும்” என்றார்.