

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த கன்கெர் மாவட்டத்தில் 15 கிலோ எடையுள்ள 2 சக்திவாய்ந்த வெடிகுண்டு களை பாதுகாப்பு படையினர் வெவ்வேறு இடங்களில் கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து கன்கெர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர சிங் மீனா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரகசிய தகவலை தொடர்ந்து, பிஎஸ்எப் மற்றும் போலீஸார் கொண்ட கூட்டுப் படையினர், பாண்டே காவல் எல்லைப் பகுதியில் 10 கிலோ எடையுடனும் சிக்சோடு காவல் எல்லையில் 5 கிலோ எடையுடனும் கூடிய இரு வெடிகுண்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
பாண்டே காவல் எல்லையில், மார்வேடா - ரெங்காவாஹி ஆகிய கிராமங்களுக்கு இடையில், ஒரு பாலத்தின் அடியில் இரும்பு பெட்டியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோல் மற்றொரு வெடிகுண்டு, சிக்சோடு காவல் எல்லையில் சனதராய் - மன்ஹகால் கிராமங்களுக்கு இடையே, ஒரு கோயிலுக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பு படையினரின் வாகனங்களை குறிவைத்து மாவோயிஸ்ட்டுகள் இவற்றை வைத்துள்ளனர். அவற்றை பாதுகாப்பு படையினர் மீட்டு செயலிழக்கச் செய்தனர்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.