

பிஹார் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில், குடியுரிமை சட்டதிருத்தம் (சிஏஏ) மீது இன்று இருவேறு கருத்துக்கள் வெளியாகின. முதல் அமைச்சர்களான பிஹாரின் நிதிஷ்குமார் மற்றும் உத்திரப்பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் பேச்சுக்களால் பிஹார்வாசிகள் இடையே குழப்பம் நிலவுமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.
பிஹாரின் இறுதிகட்டத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. இதனால், அங்கு போட்டியிடும் இரண்டு முக்கிய அணிகளான தேசிய ஜனநாயக முன்னணி(என்டிஏ) மற்றும் மெகா கூட்டணியின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதிலும் எதிர்ப்பும், ஆதரவும் நிலவின. இச்சட்டத்தை எதிர்த்து, ஆதரித்தும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.
கரோனா வைரஸ் பரவலால் இந்த போராட்டங்கள் முடிவிற்கு வந்தன. இச்சூழலில் குடியுரிமை சட்டத்திருத்தம் மீதான சர்ச்சை மீண்டும் பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் எழுந்துள்ளது.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் பகுதியின் 78 தொகுதிகளுக்கானப் பிரச்சாரம் தொடர்கிறது. இதில் தேசிய ஜனநாயக முன்னணிக்கு(என்டிஏ) தலைமை வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) தலைவரான முதல்வர் நிதிஷ்குமார் பேசினார்.
இன்றைய கிஷண்கன்ச் தொகுதியின் கூட்டத்தில் அவர், ’‘சிஏஏ சட்டத்தின் பேரில் எவரையும் நம் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டிய அவசியம் இல்லை’’ எனத் தெரிவித்தார். இதற்கு சில நூறு கி.மீ தொலைவிலுள்ள கத்தியாரில் பேசிய உபி முதல்வர் யோகி, இதற்கு நேர்எதிரான கருத்தை கூறியுள்ளார்.
பாஜகவின் முக்கிய தலைவருமான முதல்வர் யோகி கூறும்போது, ‘‘பிஹாரில் என்டிஏவின் ஆட்சி அமைந்தால் இந்தியாவில் ஊடுருவியவர்களை சிஏஏவின்படி அரசு வெளியேற்றும்.’’ எனத் தெரிவித்தார்.
இதுபோல், முக்கிய கட்சித் தலைவர்களின் இருவேறு வகையானக் கருத்துக்களால், பிஹார் வாக்காளர்கள் இடையே குழப்பம் நீட்டிக்குமா எனும் கேள்வி எழுந்துள்ளது. எனினும், இதற்கான தெளிவான விடைகள் நவம்பர் 10 -ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.