

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமோ (ஈவிஎம்) அல்லது மோடி வாக்குப்பதிவு (எம்விஎம்) இயந்திரமோ, எதுவாக இருந்தாலும், காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (ஈவிஎம்) மோடி வாக்களிக்கும் இயந்திரம் (எம்விஎம்) என்று குறிப்பிட்டார்.
பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டு கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ள நிலையில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வரும் நவம்பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. நவம்பர் 10 ஆம் தேதி தேர்தல் முடிவை அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பிஹாரில் மூன்றாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரேரியாவில் இன்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
''ஈவிஎம் என்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அல்ல. அது எம்விஎம் ஆகும். அதாவது, மோடி வாக்குப்பதிவு இயந்திரம் ஆகும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமோ (ஈவிஎம்) அல்லது மோடி வாக்குப்பதிவு (எம்விஎம்) இயந்திரமோ எதுவாக இருந்தாலும், காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். எம்விஎம்முக்கோ அல்லது மோடி சார்பு ஊடகங்களுக்கோ நான் பயப்படவில்லை.
தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் மீது பிஹார் இளைஞர்கள் கோபமாக இருப்பதால், காங்கிரஸ் கூட்டணி இந்த முறை வெல்லும்''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.