

பிஹார் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை போட்டியிடுகிறார். லோக் ஜன சக்தி(எல்ஜேபி) சார்பிலான இவரால், மெகா கூட்டணி அல்லது தேசிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்கள் வெற்றி சிக்கலுக்கு உள்ளாகி விட்டது.
பிஹாரின் சரண் மாவட்டத்தில் உள்ளது ஹத்துவா தொகுதி. இங்கு எம்எல்ஏவாக பிஹார் மாநில சமூகநலத்துறை அமைச்சரான ராம் சேவக் சிங் வகிக்கிறார். என்டிஏவிற்கு தலைமை வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சி சார்பில் இவர் அங்கு மீண்டும் போட்டியிடுகிறார்.
ராம் சேவக்கை எதிர்க்கும் வாய்ப்பு, மெகா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) கட்சியின் ராஜேஷ் சிங் குஷ்வாஹாவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. இதே தொகுதியில் சிராக் பாஸ்வானின் எல்ஜேபி சார்பில் முன்னா கின்னர் என்றழைக்கப்படும் ராம் தர்ஷன் பிரசாத் போட்டியிடுகிறார்.
இவரது போட்டியால் ஹத்துவா தொகுதியின் தேர்தல் முக்கிய கவனம் பெற்றுள்ளது. கடந்த 2006 இல் சரண் நகர கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டார். இதில், வெறும் 17 வாக்குகளில் பாஜக வேட்பாளரிடம் தோல்வி பெற்றார்.
இதற்கு முன்பாக 2012 தேர்தலில் வெற்றி பெற்ற திருநங்கை முன்னா, அதன் மீர்கன்ச் பகுதியின் கவுன்சிலரானார். இதனால், முன்னாவை தேர்வு செய்து எல்ஜேபியில் வாய்ப்பளித்துள்ளார் சிராக் பாஸ்வான்.
திருநங்கையான முன்னாவினால் ஹத்துவாவில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இவர்களுடன் சுயேச்சை வேட்பாளர்கள் 13 பேர் களத்தில் உள்ளனர். இங்கு முன்னாவிற்கு வெற்றி கிடைத்தால் அவர் பிஹாரின் முதல் திருநங்கை எம்எல்ஏவாகி வரலாறு படைத்து விடுவார்.
வட இந்தியாவின் மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு சட்டப்பேரவை தேர்தலில்
திருநங்கைகள் போட்டியிட்டனர். இதில், மபியின் சுஹாக்பூர் எம்எல்ஏவாக ஷப்னம் மவுசி எனும் திருநங்கை 2000 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டார்.
ஷப்னம் மவுசியை தனது வழிகாட்டியாகக் கருதி பிஹாரின் திருநங்கை முன்னா களம் இறங்கியுள்ளார். இவர் தனது எம்எல்ஏவிற்கான ஊதியத்தையும் பொதுமக்களுக்காக செலவழிப்பதுடன், மருத்துவ வசதியும் அனாதைகளுக்கானத் தங்குமிடமும் அமைப்பதாக உறுதி அளித்துள்ளார்.
இதற்குமுன், திருநங்கைகளை பிஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் அரசு, வரி வசூல் செய்யப் பயன்படுத்தினார். இதற்காக, ஆடிப்பாடி களம் இறங்கியவர்களிடம் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வரி பாக்கியும் வசூலானது குறிப்பிடத்தக்கது