

''அர்னாப் கோஸ்வாமி கைது சம்பவம் எமர்ஜென்சியை நினைவூட்டுகிறது'' என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரிபப்ளிக் டிவி எடிட்டர் அர்னாப் கோஸ்வாமியை இன்று காலை மும்பை போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்று கைது செய்தனர். இதனையடுத்து கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. போலீஸார் தன்னையும், தன் குடும்பத்தினரையும் தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி குற்றம் சாட்டினார்.
கட்டிட உள்வடிவமைப்பாளர் ஒருவர் 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு அர்னாப்தான் காரணம் என்று தற்கொலை செய்து கொண்டவரின் மகள் புகார் அளித்தார். இதனையடுத்து அர்னாப் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆளும் பாஜக தரப்பில் அர்னாப் கோஸ்வாமி கைதுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இக்கைது சம்பவத்திற்கு சுற்றுச்சூழல், வனத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
"மகாராஷ்டிராவில் நடத்தப்பட்டுள்ள பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். பத்திரிகைகளை அணுகும் முறை இதுவல்ல. எமர்ஜென்சி நாட்களை இது நமக்கு நினைவூட்டுகிறது'' என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
அர்னாப் கோஸ்வாமி கைது சம்பவத்திற்கு மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.