

அமெரிக்காவில் தொழில் செய்து வந்த ஹைதராபாத் நகரை சேர்ந்த ஒருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் முகமது ஆரிஃப் மொய்நுதீன் (37). இவர் கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் மளிகைக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பாத்திமா உள்ளிட்ட குடும்பத்தினர் ஹைதராபாத்திலேயே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரிஃப் கடையில் இருக்கும்போது, மர்மநபர் ஒருவர் அவரை பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கொலையை செய்தது யார், எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து ஜார்ஜியா போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆரிஃபின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அங்குள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆரிஃப் இறந்த தகவல் அமெரிக்க தூதரகம் மூலம் ஹைதராபாத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், “கடைசி முறையாக கணவரின் உடலைக் காணதனக்கு அவசர விசா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஆரிஃபின் மனைவி பாத்திமா வேண்டுகோள் விடுத் துள்ளார்.