பிரதமர் மோடியின் மனைவிக்கு 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யாசோதா பென்னுக்கு அவர் வாழ்ந்து வரும் மெஹசானா மாவட்டத்தின் காவல்துறை 24 மணிநேர போலீஸ் பாதுகப்பினை அளித்துள்ளது. நேற்று முதல் அவரது வீட்டிற்கு வெளியே பாதுகாப்பிற்காக 5 போலீஸார் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
"உயர் அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு வந்த உத்தரவின் பேரில், போலீஸ் தலைமை அலுவலகத்திலிருந்து, ஆயுதம் ஏந்திய போலீஸ் ஒருவரோடு மேலும் 4 போலீஸாரும் யசோதா பென்னின் பாதுகாப்புக்காக நேற்றிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 24 மணிநேரமும் அங்கு இருப்பார்கள், அவர் எங்கு சென்றாலும் உடன் இருப்பார்கள்" என்று மெஹ்சானா மாவட்டத்தின் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
ஆனால் காந்திநகரில் மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியுடன் வாழும், மோடியின் தாயார் ஹிராபாவிற்கு இதுவரை பாதுகாப்பு எதுவும் அளிக்கப்படவில்லை. இது குறித்து மத்திய, மாநில அரசுகளிடமிருந்து குறிப்பிட்ட உத்தரவு எதுவும் வரவில்லை என்பதால், இன்னும் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என காந்திநகரின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
