ஆபரேஷன் தாவூதுக்கு முன்னோட்டமா சோட்டா ராஜன் கைது?

ஆபரேஷன் தாவூதுக்கு முன்னோட்டமா சோட்டா ராஜன் கைது?
Updated on
2 min read

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நிழல் உலக தாதா சோட்டா ராஜன் (55) இந்தோனேசியாவில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். அவரது கைது நடவடிக்கை, தாவூத் இபராஹிமை வீழ்த்துவதற்கான புது வியூகமாக பார்க்கப்படுகிறது.

மத்தியில் மோடி அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே தாவூத் இப்ரஹிமை எப்படியாவது சிறைபிடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தச் சூழலில் தாவூதின் முன்னாள் கூட்டாளியும், தற்போதைய விரோதியுமான சோட்டா ராஜன் பாலியில் சரணடைந்திருப்பது இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கெனவே கூறிவருவதுபோல் தாவூத் வேட்டையின் உச்சகட்டம் நெருங்கிவிட்டது என்பதை உணர்த்துவதுபோலவே அமைந்திருக்கிறது.

சோட்டா ராஜனின் பங்களிப்பு:

மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு தாவூத் இப்ராஹிம் குறித்த பல்வேறு முக்கியத் தகவல்களை மும்பை போலீஸுக்கும், உளவு அமைப்புகளுக்கும் அளிப்பதில் சோட்டா ராஜன் முக்கிய பங்கு வகித்துவந்தார்.

கடந்த 2005-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு சம்பவம் சோட்டா ராஜனுக்கும் இந்திய உளவு அமைப்புகளுக்கும் இடையேயான தொடர்புகளை வெளிப்படையாக உணர்த்துவதாக அமைந்தது. சோட்டா ராஜனின் கூட்டாளியான விக்கி மல்ஹோத்ரா, அஜித் தோவலுடன் (இப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) காரில் சென்று கொண்டிருந்தபோது இடைமறிக்கப்பட்ட சம்பவம்தான் அது. இது தொடர்பாக அண்மையில் கசிந்த அமெரிக்க உளவுத் தகவலில், "விக்கி மல்ஹோத்ரா, உளவு நிறுவனங்கள் கணிப்புப்படி துபாயில் நடைபெறவிருந்த தாவூத் இப்ராஹிமின் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்லவிருந்தால், அவர் மூலம் தாவூத் இப்ராஹிமை சுட்டு வீழ்த்த வேண்டும் என்பதே இந்திய உளவு அமைப்புகளின் திட்டம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய உளவு அமைப்பையும், மல்ஹோத்ராவையும் இடையே ஒரு பாலம் போல் தோவல் இவ்விவகாரத்தில் செயல்பட்டார் என்பதே கசியவிடப்பட்ட அந்த தகவல் தெரிவிக்கிறது.

கவனிக்கப்பட வேண்டிய இரு விஷயங்கள்:

சோட்டா ராஜன் கைது / சரணில் கவனிக்கப்பட வேண்டிய இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. சோட்டா ராஜன் எங்கிருக்கிறார் என்பது இந்திய உளவு நிறுவனங்கள் நன்றாகவே அறிந்து வைத்திருந்தன. இருப்பினும் திடீரென சிபிஐ திடீரென இன்டர்போல் அமைப்பை உஷார்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

சிபிஐ-யின் இந்த நடவடிக்கையில் இருந்து இரண்டு விளக்கங்களை மட்டுமே பெற முடியும்.

ஒன்று சோட்டா ராஜனால் இனிமேல் உளவு அமைப்புகளுக்கு எந்த பயனும் இல்லை. மற்றொன்று, சோட்டா ராஜனை கைது செய்து அவரை நாடுகடத்தி இந்திய சிறையில் பத்திரமாக அடைக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டிருக்க வேண்டும்.

தாவூத்தின் நெருங்கிய கூட்டாளியான சோட்டா ஷகீல், ஆஸ்திரேலியாவில் வைத்து சோட்ட ராஜனை கொல்ல சதித்திட்டம் தீட்டியிருப்பதாக இந்திய உளவு அமைப்புகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே ராஜன் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சோட்டா ராஜன் இந்திய சிறையில் பாதுகாப்பாக இருக்க ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது உண்மை என்றால், அதன் பின்னணியில் மிகப் பெரிய பேரம் நடந்திருக்க வேண்டும். அந்த பேரம் தாவூத் இப்ராஹிமைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in