

இந்திய சரித்திரத்திலேயே யாரும் பெறாத வெற்றி கிடைத்திருப்பதாக மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் மதிமுக தலைவர் வைகோ.
நேற்று நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பின் வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்திய நாட்டின் சரித்திரத்தில் இப்படி ஒரு வெற்றி யாருக்குமே கிடைத்ததில்லை.
காங்கிரஸ் கட்சி குப்பைத்தொட்டியில் துடைத்து எறியப்பட்டு விட்டது. இந்திராகாந்தி அம்மையார் தோற்றபோது கூட குறிப்பாக தென் இந்தியாவில் 157 இடங்கள் கிடைத்தன. ஆனால், இப்போது அக்கட்சிக்கு 2 இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன.
மோடிக்காக ராம்ஜெத்மலானி டெல்லியில் நடத்திய வழக்கறிஞர்கள் மாநாட்டில் பாஜக கூட்டணிக்கு 330-க்கு மேல், பாஜகவிற்கு 272-ஐ விட அதிகமான தொகுதிகள் கிடைக்கும் என்று கூறி இருந்தேன்.
தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட தோல்விகளிலேயே எனது தோல்விதான் மிகவும் பாதித்ததாக மோடி என்னிடம் கூறினார் என்று வைகோ தெரிவித்தார்.
முன்னதாக, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கையும் வைகோ அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
திருச்சி மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மலர்வண்ணனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள இருப்பதால் தனக்கு பதிலாக முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி மதிமுக சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக வைகோ தெரிவித்தார்.
பாஜக கூட்டணியில் உள்ள மற்றொரு தமிழக கட்சியான பாமகவின் அன்புமணி ராமதாஸ், ஞாயிற்றுக்கிழமை டெல்லி வந்து மோடியை சந்திக்க முயன்றதாகவும், அது முடியாமல் போனதால் ராஜ்நாத் சிங்கை மட்டும் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.