Last Updated : 03 Nov, 2020 01:04 PM

 

Published : 03 Nov 2020 01:04 PM
Last Updated : 03 Nov 2020 01:04 PM

மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் அதிகார வரம்பை மீறுகின்றன; அரசை கவிழ்க்க முயற்சி: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

கேரளாவில் தங்கக்கடத்தல் வழக்கை விசாரித்து வரும் விசாரணை அமைப்புகள் தங்களின் அதிகார வரம்பை மீறி செயல்படுகின்றன. மக்களால்,அரசியலமைப்புச் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க முயல்கின்றன என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள தங்கக் கடத்தல் வழக்கில் நாளுக்கு நாள் திருப்பம் ஏற்பட்டு வருகிறது. என்ஐஏ விசாரணை நடத்திவரும் இந்த வழக்கில் கேரள தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அமலாக்கப்பிரிவும் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கேரள முதல்வரின் முதன்மை செயலாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சிவசங்கர் மீது வீடுகட்டும் திட்டத்தில் ஊழல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும், கேரள அரசு சார்பில் செயல்படுத்தப்பட்ட கே-ஃபோன் திட்டத்திலும் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்ததால் அதுகுறித்தும் அமலாக்கப்பிரிவு விசாரித்து வருகிறது.

இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் நேற்று நிருபர்களுக்குப்ப பேட்டி அளித்தார். அப்போது மத்திய விசாரணை அமைப்புகளை முதல்முறையாக கடுமையாகக் குற்றம்சாட்டிப் பேசினார்.

இதற்கு முன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஅரசியல் சார்ந்து பலமுறை மத்திய விசாரணை அமைப்புகளை விமர்சித்துள்ளது. ஆனால், முதல்முறையாக முதல்வர் பினராயி விஜயன் விசாரணை அமைப்புகளை விமர்சித்துள்ளார்.

பினராயி விஜயன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

தங்கம் கடத்தல் வழக்கை மத்திய அரசின் பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றன. ஆனால், அந்த விசாரணை அமைப்புகள் தங்களின் நிர்வாக அதிகார வரம்பை மீறி செயல்பட்டு, மாநிலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்கவும், அவப்பெயர் ஏற்படுத்தவும் முயல்கின்றன.

தங்கக்கடத்தல் வழக்கில் நானோ எனது அரசோ மத்திய விசாரணை அமைப்புகளின் முறையான விசாரணைக்கு எதிராக எந்தவிதமான இடையூறும் செய்யவில்லை. மாநில அரசின் நிர்வாக அதிகாரங்களையும், அரசியலமைப்புச் சட்டத்தின் உருவாக்கப்பட்ட அமைப்புகளையும் ஆக்கிரமிக்கும் வகையில் விசாரணை அமைப்புகள் செயல்படுகின்றன.

இதுஅவர்களின் அதிகார வரம்பை மீறுவதாகும், அரசியலமைப்புச்சட்டத்தை ஆக்கிரமிக்கும் செயல். ஜனநாயகத்துக்கு விரோதமான, அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான இந்தசெயலை அனுமதிக்க முடியாது. ஏற்கெனவே இருக்கும் சட்டவிதிகளைப் பயன்படுத்தி மாநில அரசு தேவையான நேரத்தில் தலையிடும்.

தங்கக்கடத்தல் வழக்கில் சட்டபூர்வமான, முழுைமயான, சுதந்திரமான விசாரணை நடக்க வேண்டும் என்றுதான் மாநில அரசு எதிர்பார்க்கிறது. அதற்கு தேவையான உதவிகளையும் வழங்கும்.

நான் எந்த விசாரணை அமைப்புகளையும், அதிகாரிகளையும் குறிப்பிட்டு குற்றச்சாட்டு கூறவில்லை. ஆனால், விசாரணை அமைப்புகளின் தொழில்ரீதியான தரம், அவர்களுக்கு வகுக்கப்பட்ட விதிமுறைகள் பிறழ்ந்து செயல்பட்டு, விசாரணையின் நோக்கம் வேறு சிலரின் விருப்பத்துக்கு ஏற்க செல்லக்கூடாது என்பதை தெளிவுபடுத்துகிறேன்.

இந்த வழக்கில் தொடர்பில்லாதவர்கள், விசாரணை அமைப்புக்கு தொடர்பில்லாதவர்கள்(மத்திய அமைச்சர் வி.முரளிதரன்) விசாரணை அமைப்புகளின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேட்டி அளிக்கிறார்கள். அவரின் கூற்றுப்படி விசாரணை அமைப்புகளும் நடக்கின்றன.

விசாரணை அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட அறிக்கைகள் சில,குறிப்பிட்டவை ஊடகங்களுக்கு கசியும் சூழலும் நிலவுகிறது.

அரசியலமைப்புச் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கைகள், முடிவுகளை ஆய்வு செய்ய விசாரணை அமைப்புகள் தொடங்கினால், அது கூட்டாட்சி கட்டமைப்பை குலைத்துவிடும், நிர்வாக இயந்திரத்தை சீர்குலைத்துவிடும். நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகளை மனச்சோர்வு அடையும் விதத்தில், விசாரணை அமைப்புகள் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது, அதேசமயம், அரசியல் தலைமைகளையும் குறைத்துமதிப்பிடக்கூடாது.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

ஆனால், காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில் “ மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் முதல்வர் விமர்சிப்பது, தன்னுடைய அலுவலகத்தையும் விசாரிக்க முயல்கிறார்கள் எனும் அச்சத்தால் பேசுகிறார். அவரின்அலுவலகத்தையும் விசாரிக்க விசாரணை அமைப்புகள் வருவதாக தகவல் கிடைத்தவுடன் அவர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார். ஆனால், இப்போது முதல்வர் மற்றும் அவர் சார்ந்திருக்கும் கட்சியின் உண்மையான நிறம் வெளியே வந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x