பிஹார் தேர்தலில் முன்னிறுத்தப்படும் வேலையில்லாத் திண்டாட்ட விவகாரம்: மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்க வாய்ப்பு

பிஹார் தேர்தலில் முன்னிறுத்தப்படும் வேலையில்லாத் திண்டாட்ட விவகாரம்: மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்க வாய்ப்பு
Updated on
2 min read

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வேலையில்லாத் திண்டாட்ட விவகாரம், முக்கியமாக முன்னிறுத்தப்படுகிறது. இப்பிரச்சினை வரும் காலங்களில் மற்ற மாநிலத் தேர்தல்களிலும் எதிரொலிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

கரோனா பரவல் காலத்தில் நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் பலரும் தம் வேலைவாய்ப்புகளை இழந்தனர். மத்திய, மாநில அரசுகளில் காலியாகும் பணியிடங்களும் குறித்த காலத்தில் நிரப்பப்படாமல் காலியாகி வருகின்றன.

இதுகுறித்த ஒரு கேள்விக்கு, கடந்த நாடாளுமன்ற பருவகாலக் கூட்டத்தொடரில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்தார். அதில் அவர், நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் 10.6 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இதன் எண்ணிக்கை பிஹாரில் மட்டும் அதில் 2.75 லட்சம் என்றிருந்தது. இதற்கும் முன்பான கூட்டத்தொடரின் ஒரு கேள்வியில், பிஹார் காவல்துறையில் 50,000 காவலர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்ற தகவல் வெளியானது.

இப்பிரச்சினை, மத்திய, மாநில அரசுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் ஆசிரியர் பணியிடங்கள் எனப் பல்வேறு துறைகளிலும் தொடர்கிறது. பிஹாரில், தனியார் வேலைவாய்ப்பிற்குப் புதிதாகத் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்து தொடங்க எவரும் ஆர்வம் காட்டுவதில்லை.

ஏற்கெனவே இங்கிருந்த கனிமவளத் தொழில்களும் ஜார்கண்ட் பிரிந்தபோது சென்று விட்டது. வேறுவழியின்றி, பிஹார்வாசிகள் அரசுப் பணியிடங்களையே அதிகமாக நம்பியுள்ளனர்.

இதன் காரணமாகவே அவர்களில் பலரும் திறனாய்வுத் தேர்வுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்மூலம், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மத்திய அரசுப் பணிகளில் அதிகமாக நுழைந்து விடுவதும் நடந்து வருகிறது.

எனவே, எந்தத் தேர்தலிலும் இல்லாதவகையில், முதன்முறையாக பிஹாரில் வேலையில்லாத் திண்டாட்டம் முக்கியப் பிரச்சினையாக முன்னிறுத்தப்பட்டுள்ளது.

இதை பிஹாரில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளரான தேஜஸ்வீ பிரசாத் யாதவ் கிளப்பினார். அதில், முதல்வர் பதவியில் 10 லட்சம் பேருக்கு அரசு பணி அளிப்பது தனது முதல் கையெழுத்தாகும் என உறுதி அளித்துள்ளார்.

இதன் மறுநாள், அதற்கான பணியும், நிதியும் எங்கிருந்து வரும் என தேசிய ஜனநாயக முன்னணியின் (என்டிஏ) முதல் அமைச்சர் வேட்பாளர் நிதிஷ் குமார் கிண்டலுடன் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, என்டிஏவின் முக்கிய உறுப்பினரான பாஜக அரசு, தனியார் சேர்த்து 19 லட்சம் பேருக்கு வேலை அளிப்பதாக அறிவிப்பை வெளியிட்டது. இதனால், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷுக்குப் பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டிருந்தது.

இதையும் சாதகமாக்கிய லாலுவின் மகனான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் பொறுப்பு தலைவர் தேஜஸ்வீ பிரச்சாரத்தைத் தொடர்கிறார். இப்பிரச்சினையால் குறிப்பாக அதிகம் பாதிக்கப்படுவது இளம் தலைமுறையினராக உள்ளனர்.

இவர்களது வாக்கு சதவீதம் என்பது சராசரியாக அனைத்து மாநிலங்களிலும் அதிகமாக உள்ளது. எனவே, பிஹாரில் கிளம்பிய வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சினை வரும் நாட்களில் மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஏனெனில், பிஹாரை அடுத்து தமிழகம், கேரளம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று பிஹாரில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 7 ஆம் தேதி கடைசிக் கட்டத்திற்குப் பின் நவம்பர் 10இல் முடிவுகள் வெளியாகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in