Last Updated : 03 Nov, 2020 09:07 AM

 

Published : 03 Nov 2020 09:07 AM
Last Updated : 03 Nov 2020 09:07 AM

நவ.7 முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்கத் தடையா? - மத்திய அரசு பதிலளிக்க தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்

நவம்பர் 7 முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வருகின்ற 14-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஏற்கெனவே கரோனா அச்சத்தினால் மக்கள் பெருமளவு கூட வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே டெல்லியில் உள்ள தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில், ‘இந்தியன் சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிடி நெட்வொர்க்’ என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவில், ‘கரோனா காலத்தில், காற்றின் தரம் மோசமாக இருப்பதால், தடுப்பு நடவடிக்கையாக தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தது.

இந்த மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயத்தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, ‘டெல்லி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள், சுற்றுச்சூழல் நலனை கருத்தில் கொண்டு, வருகிற 7-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கலாமா? என்பது குறித்து டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் தலைமைச்செயலாளர்கள், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

மேலும், வழக்கு விசாரணையை வருகிற 5-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும் இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ராஜ் பஞ்ஜ்வானி, ஷிபானி கோஷ் ஆகியோரை நம்பிக்கை அறிவுரையாளராக பசுமைத்தீர்பாயம் நியமித்துள்ளது.

கரோனா பிரச்சினை இன்னும் தீராததால் பட்டாசு வெடிப்பதினால் எழும் புகைகளினால் காற்று மாசு தரம் பாழாகி நுரையீரல் பாதிக்கப்படலாம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x