

டெல்லியில் கோவிட்-19-இன் தற்போதைய நிலை குறித்து மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா இன்று ஆய்வு நடத்தினார்.
டெல்லியில் புதிய பாதிப்புகளும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனை, பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல், சிகிச்சை போன்றவற்றில் டெல்லி நிர்வாகம் கவனம் செலுத்தி வருவதாக அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய பண்டிகைக் காலத்தில் பொது இடங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
இதனையடுத்து டெல்லியில் கோவிட்-19-இன் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. உணவகங்கள், சந்தைகள் முடி திருத்தும் கடைகள் உள்ளிட்ட இடங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் மெட்ரோ பயணத்தில் முறையான வழிகாட்டுதல் முறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.