

மத்தியப் பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத்துக்கு வழங்கப்பட்டிருந்த நட்சத்திரப் பிரச்சாரகர் அந்தஸ்தை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
தப்ரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துக் கடந்த வாரம் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளர் இமார்டி தேவியைப் பாலியல் ரீதியாகத் தரக்குறைவாகப் பேசினார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாகியுள்ள நிலையில், அவரின் கருத்துக்குப் பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தனர்.
இந்தப் புகார் மீது விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், கமல்நாத்துக்கு வழங்கப்பட்டிருந்த நட்சத்திரப் பிரச்சாரகர் அந்தஸ்தை ரத்து செய்வதாக அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கமல்நாத் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “பாஜகவினர் புகார் கொடுத்தவுடன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம் என்னிடம் எந்த விசாரணையும் செய்யாமல், முன் அறிவிப்பும் இல்லாமல், நட்சத்திரப் பிரச்சாரகர் அந்தஸ்தை ரத்து செய்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் அமர்வில் இன்று காணொலி மூலம் விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையத்தின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவேதியும், கமல்நாத் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் ஆஜராகினர்.
தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் ராகேஷ் துவேதி வாதிடுகையில், “மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்து, நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் கமல்நாத் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு தேவையில்லாதது” எனத் தெரிவித்தார்.
அதற்குக் கபில் சிபல் பதில் அளிக்கையில், “இந்த மனு ஒன்றும் தேவையில்லாத மனு அல்ல. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் முன், எந்தவிதமான நோட்டீஸும் கமல்நாத்துக்கு வழங்கவில்லை” எனத் தெரிவித்தார்
இதற்கு நீதிபதிகள் அமர்வு, “நீங்கள் எப்படி அவர்கள் கட்சியின் தலைவர் யார் என்பதைத் தீர்மானிக்க முடியும். நட்சத்திரப் பிரச்சாரகர் அந்தஸ்தைப் பறிப்பது என்பது அவர்களின் கட்சியின் அதிகாரமா அல்லது தேர்தல் ஆணையத்தின் அதிகாரமா” என்று தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியது.
அதற்கு ராகேஷ் துவேதி பதில் அளிக்கையில், “தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில்தான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், இப்போது அந்த மனு தேவையில்லாததுதானே” எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள் அமர்வு, “இந்த மனு தேவையானதா அல்லது தேவையற்ற மனுவா என்பது முக்கியமல்ல. கமல்நாத்திடம் இருந்து நட்சத்திரப் பிரச்சாரகர் அந்தஸ்தை ரத்து செய்ய அதிகாரம் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கும் என்பதை நாங்கள் தீர்மானிப்போம்” என்றனர்.
வழக்கறிஞர் துவேதி, “அதிகாரம் எங்கிருந்து கிடைக்கிறது எனும் அம்சத்தைத் தீர்மானிக்க நீங்கள் முடிவு செய்தால் தேர்தல் ஆணைய உத்தரவுக்குத் தடை விதிக்கக் கூடாது” என்றார்.
ஆனால், அதற்குத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் ஏ.எஸ் போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் அமர்வு, “அவ்வாறு செய்ய முடியாது. தேர்தல ஆணையத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்கிறோம்” என உத்தரவிட்டனர்.