

தீபாவளிக் கொண்டாட்டம் இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், புத்தாடைகள், பட்டாசுகளை வாங்குவதற்காக மக்கள் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநில அரசு, தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் அசோக் கெலாட் தன் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
"பட்டாசுகளில் இருந்து வெளியேறும் விஷப் புகை காரணமாக கோவிட்-19 பாதிக்கப்பட்ட நோயாளிகள், பொது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக, மாநிலத்தில் பட்டாசு விற்பனை செய்வதைத் தடைசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், உடற்தகுதிச் சான்றிதழ் இல்லாமல் வாகனங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,"
இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
தற்போது வட மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.