Published : 02 Nov 2020 11:40 AM
Last Updated : 02 Nov 2020 11:40 AM

ஸ்ரீநகர் என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிக்கும் இடையே நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சைப் உல் இஸ்லாம் கொல்லப்பட்டார் என்று பாதுகாப்புப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காஷ்மீர் போலீஸ் ஐஜி விஜயகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''ஸ்ரீநகரின் ரன்கிரத் பகுதியில் தீவிரவாதி ஒருவர் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று தேடுதலில் பாதுகாப்புப் படையினர் இறங்கினர். அப்போது, தீவிரவாதி இருக்கும் இடத்தை அறிந்து அவரைச் சரணடைந்து விடுமாறு பாதுகாப்புப் படையினர் கேட்டுக்கொண்டனர்.

ஆனால், அந்தத் தீவிரவாதி பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் தொடர்ந்து சுடத் தொடங்கினார். இதற்குப் பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் பதிலடி தரப்பட்டது. இந்த என்கவுன்ட்டரில் தீவிரவாதி கொல்லப்பட்டார்.

அவரை அடையாளம் கண்டதில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சைப் உப் இஸ்லாம் மிர் என்ற சைப் அலியாஸ் காஜி ஹைதர் எனத் தெரியவந்தது. இந்தத் தீவிரவாதி மலாங்போரா பகுதியைச் சேர்ந்தவர்.

போலீஸ் ஐஜி விஜய குமார் : கோப்புப்படம்

ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பின் கமாண்டராக இருந்த ரேயாஸ் நயாக் கொல்லப்பட்டபின், அவரின் இடத்தில் சைப் உல் இஸ்லாம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தார். ஏராளமான தீவிரவாதத் தாக்குதல்களை சைப் உல் இஸ்லாம் நடத்தியுள்ளார். இளைஞர்களை மூளைச்சலவை செய்து தங்கள் அமைப்பில் சேர்த்துள்ளார். சைப் உல் இஸ்லாம் கொல்லப்பட்டது மிகப்பெரிய வெற்றியாகும், ஹிஸ்புல் அமைப்புக்கு இனி தலைவரே இல்லை.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் 3 போலீஸார் கொல்லப்பட்டது, 3 பாஜக உறுப்பினர்கள் கொல்லப்பட்டது, 2 லாரி ஓட்டுநர்கள் கொலை, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது என அனைத்துத் தாக்குதல்களையும் சைப் உல் இஸ்லாம் நடத்தியுள்ளார்.

ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பில் கடைசியாகச் செயல்பட்டு வந்த தலைவர் சைப் உல் இஸ்லாம், கடந்த 2016-ம் ஆண்டு புர்ஹான் வானி கொல்லப்பட்டபின் அந்த அமைப்பில் கொல்லப்பட்ட அதிகாரமிக்க தலைவர்.

சைப் உல் இஸ்லாம் நடவடிக்கையைக் கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். அடுத்த தாக்குதல்களை போலீஸார் மீது நடத்த சைப் உல் இஸ்லாம் திட்டமிட்டு வருவதாக அறிந்து போலீஸார் கண்காணித்தனர். அவரின் நடமாட்டதைக் கண்காணித்து சரியாகக் கூறிய ஆனந்த்காக் போலஸீாருக்கு வாழ்த்துகள்.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை ஜம்மு காஷ்மீரில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளார்கள்.

கொல்லப்பட்ட தீவிரவாதி சைப் உல் இஸ்லாமின் உடல் பாரமுல்லா நகருக்குக் கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு அறிக்கை முடிந்தபின் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்''.

இவ்வாறு விஜயகுமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x