

மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி எஸ்தர் நாம்தே. இந்த வயதிலேயே யூடியூப் சேனல் தொடங்கி, தான் பாடிய பாடல்களை பதிவு செய்து வருகிறார்.
அண்மையில் இவர் வந்தே மாதரம் பாடலை மிக அழகாகப் பாடியுள்ளார். எஸ்தர் பாடிய இந்தப் பாடல் அடங்கிய வீடியோவை மிசோரம் முதல்வர் சோரம்தங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இதை தனது ட்விட்டர் பக்கத்தில் ‘டேக்’ செய்த பிரதமர் மோடி, ‘‘சிறுமி எஸ்தர் மிக அழகாக வந்தே மாதரம் பாடலைப் பாடியுள்ளார். அவர் பாடியதற்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிறுமியின் செயலால் பெருமை கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
எஸ்தரின் வந்தே மாதரம் பாடல் வீடியோ, கடந்த மாதம் 25-ம் தேதி அவரது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதுவரை 73 ஆயிரம் உறுப்பினர்களை அவரது யூடியூப் சேனல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 1997-ம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய வந்தே மாதரம் பாடலைதான் தற்போது எஸ்தர் பாடி, யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.