

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்போம் என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்றது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பிஹார் சட்டமன்றத்தின் மீதமுள்ள 172 சட்டமன்றத் தொகுதி நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளன. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10 அன்று அறிவிக்கப்படுவதாக திட்டமிடப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றோடு முடிவடைவதால் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும் அக் கட்சியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பிஹார் முதல்வர் நிதீஷ் குமாரைத் தாக்கிப் பேசினார்.
அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில் தேஜஸ்வி கூறியதாவது:
முதல்வர் நிதிஷ்குமார், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 50ஆகக் குறைத்து ஓர் ஆணையை வெளியிட்டார். ஆனால் அவரே 70 வயதைக் கடந்துவிட்டார். ஆனால் இந்த முறை பொதுமக்கள் அவரை ஓய்வு பெற வைக்கப் போகிறார்கள்.
எங்கள் அரசாங்கம் அமைக்கப்பட்டால், நாங்கள் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்போம். பிஹாரில் மக்கள் ஏன் 3 ஆண்டுகளில் பட்டப்படிப்பை முடிக்க நிலை ஏற்பட்டுள்ளது, ஏன் அவர்களுக்கு 4-5 ஆண்டுகள் ஆகும் நிலை ஏற்படுகிறது என்பதை நிதிஷ் குமார் சொல்லவேண்டும். இன்று பிஹாரில் உயர்கல்வி முறை மிகவும் மோசமாக உள்ளதென்றால் அதற்குக் காரணம் முதல்வர் நிதிஷ்குமார்தான்.
இவ்வாறு தேஜஸ்வி தெரிவித்தார்.