

இலவச தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலை யானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் டோக்கன் வாங்குவதில் நேற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பதி திருமலை கோயிலில் இலவச டோக்கன் மூலம் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கடந்த 5 நாட் களாக திருப்பதி அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் தினமும் 3 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. இதைப் பெறுவதற்காக முதல்நாள் இரவு முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
சில மணி நேரத்திலேயே 3 ஆயிரம் டோக்கன் களும் விநியோகித்து முடிந்து விடுவதால், ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உள்ளது. இதனால் தேவஸ்தான ஊழியர்கள் – பக்தர்கள் இடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்படுகிறது.
இலவச டோக்கன் வாங்க நேற்று முன்தினம் இரவு வரிசையில் நின்றிருந்த வேலூரைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண் கூட்ட நெரிச லில் சிக்கி மயக்கம் அடைந்தார். அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள திருப் பதி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை திரளான பக்தர்கள் டோக்கன் வாங்குவதற்காக வரிசை யில் காத்திருந்தனர். அப்போது 3 ஆயிரம் டோக்கன்களும் விநியோகித்து முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால், கோபமடைந்த பக்தர்கள், தேவஸ்தான ஊழியர்களிடம் வாக்கு வாதம் செய்தனர். இதனால், அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதுபற்றி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் பக்தர்கள் முறையிட்டனர். இதையடுத்து கூடு தலாக 2 ஆயிரம் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தர்மா ரெட்டி கூறியதாவது:
இலவச டோக்கன் வழங்குவதால் பக்தர் கள் நேரில் வர வேண்டியுள்ளது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. 10 வயதுக்குட் பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டோரை அழைத்துவர வேண்டாம் என கூறினாலும், அவர்களையும் சிலர் அழைத்து வருகின்றனர். தற்போது 5 ஆயிரம் இலவச டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. திங்கட்கிழமை மேலும் 2 ஆயிரம் டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதன்மூலம் பக்தர்களின் நெரிசல் ஏற்பட்டால், அது மத்திய, மாநில அரசுகளின் கரோனா நிபந்தனைகளுக்கு எதிராக அமைந்துவிடும். எனவே, இனி இலவச தரிசன டோக்கனை ஆன்லைன் மூலம் வழங்கலாமா என யோசித்து வருகிறோம். இலவச டோக்கன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கலாமா அல்லது மேலும் சில நாட்கள் வரை இதனை நிறுத்தி வைக்கலாமா என்பது குறித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு தர்மா ரெட்டி கூறினார்.