

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு இந்துவை திருமணம் செய்து கொண்டார். இதற்கு அந்தப் பெண்ணின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்தப் பெண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “எங்கள் திருமண வாழ்க்கையில், என் தந்தையும் குடும்பத்தினரும் குறுக்கிடுகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி, திருமணத்துக்காக மதம் மாறுவது செல்லாது என கடந்த செப்டம்பர் 23-ம் தேதி உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், “மணமகள் கடந்த ஜூன் 29-ம் தேதி மதம் மாறியுள்ளார். அடுத்த ஒரு மாதத்தில், ஜூலை 31-ம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதன்மூலம் திருமணத்துக்காகவே அந்தப் பெண் மதம் மாறியது தெளிவாகத் தெரிகிறது. எனவே, இந்த மனு நிராகரிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.