நாட்டிலிருந்து வறுமையை விரட்டியடிக்க இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

நாட்டிலிருந்து வறுமையை விரட்டியடிக்க இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்
Updated on
2 min read

நாட்டில் வகுப்பு நல்லிணக்கம் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. பிஹார் சட்டப்பேரவை தேர்தல் வரும் 12-ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக நடக்கிறது. இதற்கான தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

நவேடாவில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:

நாட்டிலிருந்து வறுமையை விரட்டி அடிக்க இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்து பாடுபட வேண்டும். அரசியல்வாதிகள் பொறுப்பற்ற வகையில் பேசினால் அதை காதில் வாங்கிக் கொள்ளக்கூடாது.

நமது பண்பாட்டின் மையக் கருத்துகளாக விளங்கும் பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை., வேற்றுமையில் ஒற்றுமை போன்றவற்றை காத்திட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்றுமுன்தினம் சொன்ன அறிவுரையை நாட்டு மக்கள் பின்பற்றிடவேண்டும்.

வறுமையை விரட்டுவதில் முஸ்லிம்களும் இந்துக்களும் கைகோத்து பாடுபட்டால் நாட்டுக்கு நல்லது. வெறுப்பை விதைக்கும் அரசியலை நான் அடியோடு வெறுக்கிறேன். ஒற்றுமை, மத நல்லிணக்கம், சகோதரத்துவம், அமைதி இவைதான் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக முங்கர், பெகுசராய், சமஸ்திபூர் ஆகிய இடங்களில் பாஜக சார்பில் நேற்று நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

‘இந்துக்களும் மாட்டிறைச்சி உண்கின்றனர்’ என்று ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் கூறியிருக்கிறார். அதன் மூலம் பிஹாரையும் குறிப்பாக யாதவ சமூகத்து மக்களையும் லாலு இழிவுபடுத்திவிட்டார். பசுக்களை நம்பிதானே பெரும்பாலான யாதவர்களின் வாழ்க்கை உள்ளது. அந்த யாதவ மக்கள்

தானே லாலுவை முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் லாலு பேச்சு அவர்களை இழிவுபடுத்துவது போல் இல்லையா? இதுபோன்றவர்களுக்கு பிஹாரில் இடம் கொடுக்கலாமா? லாலுவின் உடலுக்குள் சைத்தான் புகுந்துவிட்டது. அதனால்தான் அவர் அப்படி பேசியிருக்கிறார். ஜனநாயகத்துக்காக வாழ்நாள் முழுவதும் காங்கிரஸை எதிர்த்து போராடிய தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண். அவருடைய புகழை ஒரு காலத்தில் பாடி வந்தவர்கள்தான் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் லாலு பிரசாத்தும். ஆனால், எமர்ஜென்சி கால கட்டத்தில் ஜெயப்பிரகாஷை சிறையில் தள்ளிய காங்கிரஸ் கட்சியுடன் இப்போது இருவரும் கூட்டணி வைத்துள்ளனர். இது மகா சந்தர்ப்பவாதம். பிஹாரில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லை. அதனால் ஐஜத மற்றும் ஆர்ஜேடியுடன் கூட்டணி வைத்து பின்வாசல் வழியாக அரசியல் ஆதாயம் தேட காங்கிரஸ் முயற்சிக்கிறது.

லாலு ஆட்சியின்போது கடத்தல் என்பது ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. பண்டிகை நாட்களில் கூட சூரியன் மறைந்தபிறகு மக்கள் வெளியில் வர பயந்தனர். தாதாக்கள் பிடுங்கி கொள்வார்கள் என்ற பயத்தில் புதிய வாகனங்கள் வாங்க பயந்தனர். நிதிஷ் குமாரும் லாலுவும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த

நிலைமை அதிகரிக்கும். பிஹாரில் காட்டு தர்பார் வேண்டுமா, வளர்ச்சி வேண்டுமா என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு மோடி பேசினார்.

உ.பி.யில் மாட்டிறைச்சி உண்டதாக பரவிய வதந்தியால் தாத்ரியில் முதியவர் இக்லாக் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், லாலு கூறியதை பிரச்சாரமாக்கி வருகிறார் என்று எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in