

சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு காரணமாக மும்பையில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
மும்பை சண்முகானந்த அரங்கில் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், சிவசேனா கட்சியின் கடும் எதிர்ப்பு காரணமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.
இது தொடர்பாக சிவசேனா கட்சி சார்பில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில், "குலாம் அலியின் நிகழ்ச்சியை உடனடியாக ரத்து செய்க. ஏனெனில் அவர் நம் நாட்டின் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். எக்காரணமும் இல்லாமல் நம் படை வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர்.
இந்நிலையில், தேசபக்தி மிகுந்த ஓர் அமைப்பாக சிவசேனா பாகிஸ்தான் பாடகரின் நிகழ்ச்சியை மும்பையில் நடத்த கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. எனவே, இந்திய குடிமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த நிகழ்ச்சியை ரத்து செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தது.
கடிதம் குறித்து சிவசேனா கட்சியின் சினிமா பிரிவு பொதுச் செயலாளர் அக்ஷய் பர்தாபுர்கர் 'தி இந்து' -விடம் கூறும்போது, "எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாடகரை இந்தியாவில் நிகழ்ச்சி நடத்த அழைப்பது என்பது இந்தியர்களுக்குச் செல்லும் அவமரியாதை. இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்களுக்கு இந்தக் கடிதம் சரியான ஒரு செய்திய எடுத்துச் சென்றிருக்கிறது" என்றார்.
இதற்கிடையில், நேற்று மாலை (புதன்கிழமை) நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர்கள் ரத்து செய்தனர்.
குலாம் அலி, இதற்கு முன் பலமுறை மும்பையில் இசை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.