

இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில், 'உபெர்' டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவை குற்றவாளி என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி தனியார் கால் டாக்சியில் சென்றபோது, அதன் டிரைவரால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக 25 வயது இளம் பெண் ஒருவர் புகார் தெரிவித்தார்.
தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்தில் இது தொடர்பாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஷிவ்குமார் யாதவ் (32) என்ற கால் டாக்ஸியின் டிரைவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு கடந்த ஜனவரி 15-ம் தேதி முதல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வாதங்களும் விசாரணையும் நிறைவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'உபெர்' டாக்சி பலாத்கார வழக்கில் டிரைவர் ஷிவ் குமார் யாதவை குற்றவாளி என்று டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
ஒரு பெண்ணை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்ததாக ஷிவ் குமார் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். அந்த விசாரணையின்போது, எந்த மாதிரியான தண்டனை விதிக்கப்படுவது தொடர்பாக விவாதம் நடைபெறும்.
இந்த வழக்கில் 28 சாட்சியங்களிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட அணிவகுப்பில் குற்றவாளியை அடையாளம் காட்டினார்.
ஷிவ் குமார் பின்னணி:
கைதான ஷிவ் குமார், ஏற்கெனவே 2011-ம் ஆண்டு குர்காவ்னில் 22 வயது இளம்பெண்ணை காரில் அழைத்துச் செல்லும்போது, பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கைது செய்யப்பட்டார். இதற்காக, ஏழு மாதம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் பாதிக்கப்பட்டவருடன் சமாதானம் பேசி விடுதலையானார்.