

மத்தியப் பிரதேச மாநில இடைத் தேர்தலில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்துக்கு அளிக்கப்பட்டிருந்த நட்சத்திரப் பிரச்சாரகர் அந்தஸ்தை தேர்தல் ஆணையம் நேற்று ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கமல்நாத் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
தப்ரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கடந்த வாரம் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளர் இமார்டி தேவியைப் பாலியல் ரீதியாகத் தரக்குறைவாகப் பேசினார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாகியுள்ள நிலையில், அவரின் கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தனர்.
இந்தப் புகார் மீது விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், விளக்கம் கேட்டு கமல்நாத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால், அவர் அளித்த விளக்கம் மனநிறைவாக இல்லாததையடுத்து, அவர் மீது நேற்று தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.
இதன்படி, “கமல்நாத்துக்கு வழங்கப்பட்டிருந்த நட்சத்திரப் பிரச்சாரகர் அந்தஸ்தை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் கமல்நாத் தேர்தல் பிரச்சாரம் செய்யச் சென்றால் அவருக்கான செலவை காங்கிரஸ் கட்சி ஏற்க வேண்டும். மற்றவர்கள் பிரச்சாரம் செய்யவந்தால் அவர்களுக்குரிய செலவை வேட்பாளர் ஏற்க வேண்டும். கமல்நாத்துக்கு நட்சத்திரப் பிரச்சாரகர் அந்தஸ்தை வழங்கக் கூடாது’’ என்று உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கமல்நாத் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட நட்சத்திரப் பிரச்சாரகர் அந்தஸ்தை மீண்டும் வழங்கக் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான விவேக் தன்ஹா நிருபர்களிடம் கூறுகையில், “கமல்நாத் மீது நடவடிக்கை எடுத்து நட்சத்திரப் பிரச்சாரகர் அந்தஸ்தை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கமல்நாத் சார்பில் வழக்கறிஞர் வருண் சோப்ரா மனுத்தாக்கல் செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.