கரோனா வைரஸ்; முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவதற்கான சட்டம்: ராஜஸ்தானில் அறிமுகம்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவதற்கான ஒரு சட்டத்திருத்த மசோதாவை ராஜஸ்தான் அரசு சட்டப்பேரவையில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவுக்குக் குறைந்து வந்தாலும் அதன் பாதிப்பு கணிசமான அளவில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இன்னும் சில மாதங்கள் இதன் தாக்கம் இருக்கும் என்பதால் ராஜஸ்தான் அரசு முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி உள்ளது.

ராஜஸ்தானில் 1,95,213 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,78,064 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,898. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 15,251 ஆகும்.

இந்நிலையில் ராஜஸ்தான் தொற்று நோய்கள் (திருத்தம்) மசோதா, 2020 மாநில சட்ட அமைச்சர் சாந்தி தரிவாலால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்படி ராஜஸ்தான் தொற்று நோய்கள் சட்டம், 2020 இன் பிரிவு 4 இல் ஒரு புதிய சட்டப் பிரிவு இணைக்கப்பட்டுள்ளது. இச்சட்டத் திருத்தம் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை முன்மொழிகிறது. மேலும், வாய் மற்றும் மூக்கைச் சரியாக மறைக்காமல் செல்வதையும் இம்மசோதா தடை செய்கிறது.

இந்தச் சட்ட மசோதாவின் அறிக்கையில், "முகக்கவசம் பயன்படுத்துவது கோவிட் 19இன் பரவலைக் கணிசமாகக் கட்டுப்படுத்தவும், மில்லியன் கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றவும் உதவும் என்று உலகெங்கிலும் உள்ள சுகாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

பொது இடங்கள், பணியிடங்கள், சமூக, அரசியல் கூட்டங்கள், பொது அல்லது தனியார் போக்குவரத்து ஆகியவற்றில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in