

எதிரிகளின் போர்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையை, இந்திய கப்பல் படை நேற்று சோதித்து பார்த்தது. இந்த ஏவுகணை சோதனை முழு வெற்றி பெற்றுள்ளது.
இதுகுறித்து இந்திய கப்பல் படை செய்தித் தொடர்பாளர் நேற்று அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ‘‘வங்கக் கடலில் இருந்து எதிரி போர்க் கப்பல்களை தாக்கி அழிக்கும் (ஏஎஸ்எம்) ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. திட்டமிட்டபடி மாதிரி கப்பலை ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்தது. இந்த சோதனை ஐஎன்எஸ் கோரா கப்பலில் இருந்து நடத்தப்பட்டது. ஏவுகணை தாக்கியதும் மாதிரி கப்பல் முற்றிலும் சேதம் அடைந்து தீப்பிடித்து எரிந்தது’’ என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோவையும் கப்பல் படை செய்தித் தொடர்பாளர், ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்திய கப்பல் படை இதேபோல் ஐஎன்எஸ் பிரபால் கப்பலில் இருந்து இதே ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை நடத்திப் பார்த்தது. இதுதொடர்பான வீடியோவையும் கப்பல் படை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.