

இந்தியாவைச் சேர்ந்த இணையதள நிதி நிறுவனமான பேடிஎம் சீனாவில் மேற்கொண்ட முதலீடு, பணப் பரிவர்த்தனைகள் குறித்து நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியது.
கூகுள், அமேசான், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாகும். ஆனால் பேடிஎம் மட்டுமே இந்திய நிறுவனமாகத் திகழ்கிறது. இந்நிறுவனம் சீனாவில் இருந்து பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் சீனாவுக்கு நிதி திரும்ப அனுப்பப்பட்டது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேடிஎம் நிறுவனத்திடம் நாடாளுமன்ற குழு கேள்வியெழுப்பியது. அத்துடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட பந்தய செயலி குறித்தும் கேள்விகள் கேட்டகப்பட்டன. இந்த பந்தய செயலியானது கூகுள் நிறுவனத்தின் விதிகளுக்குப் புறம்பானதாக இருந்ததால் அது நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேடிஎம் நிறுவனத்தின் துணைத் தலைவர்கள் நரேந்திர சிங் யாதவ், தர்மேந்திர ஜாம்ப் ஆகியோர் சீனாவில் இருந்து 35 சதவீத முதலீடு பெறப்பட்டதாக ஒப்புக்கொண்டனர். அத்துடன் சில முக்கிய தகவல்கள் இந்தியாவுக்கு வெளியே பகிரப்பட்டதாகவும், அது பகுப்பாய்வு பணிக்காக அளிக்கப்பட்டதாகவும் கூறினர்.
தவிர, கூகுள் நிறுவனம் சார்பில் நாடாளுமன்றக் குழுவிடம் தாக்கல் செய்யப்பட்ட 25 பக்க அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூகுள் நிறுவனம் சார்பில் கீதாஞ்சலி துகால் மற்றும் அமன் ஜெயின் மற்றும் ராகுல் ஜெயின் ஆகியோர் ஆஜராகி கருத்துகளைத் தெரிவித்தனர். பிடிபி மசோதா அமல்படுத்தப்படும் போது தனி நபர் பாதுகாப்பு குறித்த விஷயங்கள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.
கூகுள், பேடிஎம் ஆகிய இரு நிறுவனங்களின் பின்புல விவரம், அவற்றுக்கு எந்தெந்த நாடுகளில் தொடர்பு அல்லது எங்கிருந்து முதலீடு பெறப்படுகிறது, நிறுவனத்துக்கு கிடைக்கும் வருமானம், செலுத்தும் வரி உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இரு நிறுவனங்களின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் ஒப்புதலோடு ஒருவாரத்துக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்றகுழு தலைவர் மீனாக் ஷி லெஹி தெரிவித்தார்.