

‘‘காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்ற பிறகு, புதிய குழுவை உருவாக்குவார். கட்சியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் விலகும் நேரம் வந்து விட்டது. எனினும் அவர்கள் ஆலோசகர்களாக நீடிப்பார்கள்’’ என்று மாநிலங்களவை எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ், செய்தியாளர் களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அல்லது அதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்றுக் கொள்வார். அப்போது தன்னுடன் பணியாற்ற புதிய குழுவை ஏற்படுத்துவார். மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகும் நேரம் வந்துவிட்டது. அவர்கள் ஆலோசகர்களாக கட்சியில் நீடிக்கலாம். பாஜக.வில் நரேந்திர மோடி செல்வாக்கு பெற்றதும், மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்கா, ஜஸ்வந்த் சிங் உட்பட மூத்த தலைவர்களை (சைபீரியாவுக்கே அனுப்பி விட்டார்) வெளியேற்றி விட்டார். அது போல் ராகுல் காந்தி செயல்பட மாட்டார் என்று நினைக்கிறேன்.
கட்சியின் மூத்த தலைவர் களுக்கு மதிப்பளித்து அவர்களை ஆலோசகர்களாக வைத்து கொள் வார். ராகுல் கட்சி தலைவராக பொறுப்பேற்றால் எந்த ரத்த ஆறும் ஓடாது. கட்சி தலைவராக ராகுல் மட்டும் பொறுப்பேற்க மாட்டார். ஒட்டுமொத்த காங்கிரஸ் குழுவையும் உருவாக்கிய பிறகே அவர் பதவியேற்பார். அதற் காகத்தான் போதிய அவகாசம் எடுத்து கொள்கிறார். குழு இல் லாமல் தலைவர் மட்டும் இருப்பது எந்த பயனும் அளிக்காது. எனவே காங்கிரஸ் கட்சியை மாற்றி அமைக்கும் பணிகளில்தான் ராகுல் கடந்த சில மாதங்களாக தீவிரமாக இருக்கிறார்.
ஒவ்வொரு முறையும் கட்சியில் மாற்றம் ஏற்படுவது சகஜம். இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு ராஜீவ் காந்தி கட்சி பொறுப் பேற்றார். அதன்பிறகு சோனியா காந்தி. இப்போது ராகுல். ஆனால், இந்த முறை 60, 70, 80 வயது மூத்த தலைவர்களின் பங்கு முடிந்து விடும். எனினும் 70, 80 வயது முடிந்த வர்கள் தாமாகவே கவுரவமாக கட்சியை விட்டு விலகலாம். ஆனால், 60 வயதுக்கு மேற்பட்ட வர்களின் அனுபவம், அறிவு ஆகியவற்றை ராகுல் பயன்படுத்தி கொள்வார். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.