Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM

நிதி பற்றாக்குறை இருந்தாலும் சலுகைகள் வழங்க அரசு தயங்கவில்லை: குற்றச்சாட்டுகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான விளக்கம்

நிர்மலா சீதாராமன்

ரகுவீர் ஸ்ரீனிவாசன், ரிச்சா மிஸ்ரா, ஷிஷிர் சின்ஹா

கரோனா ஊரடங்கு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வந்த போதிலும், நாட்டின் பொருளாதார நிலை இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. பெரும்பாலான துறைகள் அரசின் உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. சலுகைகள் அளிப்பதால் அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்ற அச்சமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால் அரசு அளிக்கும் சலுகைகளையும், நிதிப் பற்றாக்குறையையும் சரியான விகிதத்தில் கையாள முடியும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அனைத்து துறைகளுடனான கலந்தாய்வு அணுகுமுறை காரணமாக அனைத்துத் தரப்பினரின் குரலுக்கும் செவிமடுக்கும் அரசாக இது செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். காணொலி மூலம் ‘பிசினஸ் லைன்’ நாளிதழுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியின் சுருக்கமான விவரம் வருமாறு:

மத்திய, மாநில அரசுகள் இடையிலான உறவு நலிந்து வருவதாகவும் கூட்டாட்சி தத்துவத்துக்கு மிகப்பெரும் நெருக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது ஏற்புடையதல்ல. நாம் ஒருபோதும் கூட்டாட்சி குறித்து விவாதித்ததே கிடையாது. ஆனால், ஒவ்வொரு விஷயத்துக்கும் அதை தொடர்புபடுத்துவது கூட்டாட்சி தத்துவமாகாது. உண்மையில் கூட்டாட்சி தத்துவம் வலுவாகவே உள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதை கூட்டாட்சி தத்துவத்துடன் ஒப்பிடுவது ஏற்புடையதாக இருக்குமா?

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் விஷயத்தில் கூட்டாட்சி முறைக்கு பங்கம் வந்துவிட்டதாக கருத வேண்டியதில்லை. மத்திய, மாநில அரசுகள் இடையிலான உறவு மிகவும் வலுவாகவே உள்ளது. ஒருங்கிணைந்த முடிவுகளின் அடிப்படையில்தான் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்படுகிறது.

செப்டம்பர் மாதம் சில துறைகளுக்கு அளிக்கப்பட்ட சலுகையின் பலன் அக்டோபரில் தெரிந்தது. அனைத்துத் துறைகளிலும் மீட்சி தெரிகிறது. ஒவ்வொரு துறையும் அதற்குரிய கால நேரத்தில் நிச்சயம் மீட்சியடையும். உற்பத்தித் துறையுடன் ஆலோசனை நடத்தினேன். ஊரடங்கு காலத்திலும் இதுபோன்ற ஆலோசனைகள் நடைபெற்றன. தேவை அதிகரிக்கும் போது அவர்கள் முழு உற்பத்தித் திறனை எட்டுவதாக தெரிவித்துள்ளனர். எதிர்வரும் பண்டிகைக் காலத்துக்குப் பிறகும் நுகர்வு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவை அடிப்படையிலான சப்ளை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இது ஸ்திரமான மீட்சியாக இருக்கும்.

2021-22-ம் ஆண்டில் இந்தியாவுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் பலனாக மட்டுமல்ல தொழில் துறை எடுக்கும் நடவடிக்கைகளாலும் உற்பத்தி அதிகரிக்கும். புதிய ஏற்றுமதி வாய்ப்புகள் உருவாகும். ஒரு சில பொருட்களை வாங்குவதற்கு இந்தியாவும் சிறந்த நாடாக உருவாகும். கரோனாவால் பாதிப்பு என்பதை மறுக்க முடியாது. அதேசமயம் அது சில வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.

பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதற்காக அரசு சலுகைகளை வழங்க தயங்குவதாகக் கூறுவது வியப்பான விஷயம். அனைத்துத் துறைகளையும் கருத்தில் கொண்டுதான் மானிய சலுகைகள், ஊக்க சலுகைகள் அளிக்கப்படுகின்றன. சலுகைகள் வழங்குவதற்கு முன்பு பல்வேறு கட்ட பரிசீலனைகள் செய்யப்படுகின்றன. வழங்கப்படும் சலுகைகள் எந்த நோக்கத்துக்காக அளிக்கப்படுகிறதோ, எவரிடம் சென்று சேர வேண்டும் என்று அரசு கருதுகிறதோ, அந்த கடைக்கோடி பொதுமக்களும் அதனால் பயன்பெற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அனைத்து முயற்சிகளுக்கும் ரிசர்வ் வங்கி முழுமையான ஒத்துழைப்பை அளிக்கிறது. அரசும் ரிசர்வ் வங்கியும் ஒருங்கிணைந்தே பல முயற்சிகளை மேற்கொள்கின்றன.

விவசாய மசோதாக்களை சில மாநிலங்கள் எதிர்த்து தங்கள் மாநிலத்துக்கேற்ப சட்டம் இயற்றியுள்ளன. இந்த மசோதாவை செயல்படுத்துவதைத் தடுக்கும் என்று கருத முடியாது.

முன்பு மண்டியில் விவசாயி தனது விளைபொருளை விற்பதாயிருந்தால் விற்பனை செய்யப்படும் தொகையில் 3 சதவீத வரியை அப்பகுதி மேம்பாட்டுக்கு அளிக்க வேண்டும். அத்துடன் 3 சதவீதத்தை மண்டி கட்டணமாக செலுத்த வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட தொகையை தரகருக்கு அளிக்க வேண்டும். இதுதொடர்பாக எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பல முறை அரசு பதில் அளித்துவிட்டது. தற்போது இதை எதிர்ப்பவர்கள் ரயில் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதுவும் நிலக்கரி, உரம் உள்ளிட்டவற்றை எடுத்து வரும் சரக்கு ரயிலை தடுத்து நிறுத்துகின்றனர். இதில் இருந்தே அவர்கள் போராட்டமே அரசியலாக்குவதற்குதான் என்பது புரியும்.

அறிவிக்கப்பட்ட துறைகளுக்கு மானிய சலுகை சென்றடைவதற்கு போதிய அவகாசம் தேவை. அதேசமயம் நிதிப் பற்றாக்குறையைப் பற்றி கவலைப்படாமல் பல்வேறு துறைகளும் செலவினங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளதைப் பார்க்கும் போது பல நாட்கள் தனக்கு தூக்கம் தொலைந்துபோனதாக முன்னாள் பிரதமர் கூறியிருப்பது ஏற்புடையதாக இல்லை. கரோனா ஊரடங்கு காலத்திலும் வேறு உலகம் உள்ளது என பலர் கூறுகின்றனர். பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும், வளமான எதிர்காலம் தெரிகிறது. ஊரடங்கு காலத்தில் 10 லட்சம் டி-மேட் கணக்குகள் தொடங்கப்பட்டதில் இருந்தே பங்குச் சந்தை சரிவு தொடரும் அல்லது இதனால் தூக்கம் தொலையும் என்பதை எப்படி ஏற்பது? இந்திய முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடையவர்கள். நிரந்தர சேமிப்பு அல்லது தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில்தான் முதலீடு செய்வார்கள். தங்களது முதலீடு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதுதான் இதற்கு காரணம். தற்போது பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். தற்போது நேரடியாகவே பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்க மாற்றமே.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x