

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ரஷ்யாவில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சந்திர குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் தலைசிறந்த புதல்வர்களுள் ஒருவர். சிறந்த பிரதமர்களிலும் ஒருவர். கடந்த 1966 ஜனவரி 11-ம் தேதி தாஷ்கண்ட்டில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. அதன் பின்னால் உள்ள உண்மை இன்று வரை தேசத்தின் முன் மறைக்கப்படுகிறது.
1966-ல் தான் ரஷ்யாவிலிருந்து திரும்பி வந்ததும் நேதாஜி ரஷ்யாவில் இருக்கிறாரா என்பது குறித்து அறிந்து கொள்ள முறையான விசாரணைக்குழு அமைக்கப்படும் என்று 1965 டிசம்பர் 23-ம் தேதி கொல்கத்தாவில் என் தந்தை அமியா நாத் போஸிடம் சாஸ்திரி வாக்குறுதி அளித்திருந்தார்.” எனப் பதிவிட்டுள்ளார்.
லால் பகதூர் சாஸ்திரி மரணம் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.